×

எலுமிச்சை விலை ஏறுமுகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

ஒட்டன்சத்திரம்: எலுமிச்சை விலை உயர்ந்துள்ளதால், அவற்றை நடவு செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான வடகாடு, பால்கடை, கண்ணணூர், புலிக்குத்திக்காடு, பெத்தேல்புரம், சிறுவாட்டுக்காடு, ஆடலூர், பன்றிமலை, பாச்சலூர், கே.சி.பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் எலுமிச்சை நடவு செய்துள்ளனர். தற்போது எலுமிச்சை அறுவடை நடைபெற்று வருகிறது.

இந்தாண்டு இப்பகுதிகளில் போதிய மழையில்லாததால், எலுமிச்சை விளைச்சல் குறைந்துள்ளது. வெயில் காலம் முடிந்தும் அதன் தாக்கம் குறையாததால், பொதுமக்கள் அதிகளவில் இளநீர், சர்பத், பழச்சாறு, குளிர்பானம் போன்றவற்றை நாடி செல்கின்றனர். குறிப்பாக எலுமிச்சம்பழங்களை அதிகளவில் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் அதன் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வரத்து குறைவால் எலுமிச்சை விலை அதிகரித்துள்ளது.

ஒட்டன்சத்திரம் எலுமிச்சை மார்க்கெட்டில் கடந்த மாதம் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.30 முதல் ரூ.40 வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது வரத்து குறைவு காரணமாக ஒரு கிலோ ரூ.80லிருந்து ரூ.90 வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் எலுமிச்சை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Tags : Lemon price rise: Farmers happy
× RELATED மதுராந்தகம் அருகே வெள்ளப்புத்தூர்...