வாகன விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் மேடு பள்ளமாக மாறிய தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

நெல்லை: வாகன விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் மேடு பள்ளமாக மாறிய தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர். தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள சாலை மேடும் பள்ளமுமாக உள்ளது. இந்த பைபாஸ் சாலையில் தச்சநல்லூர் வழியாக சங்கரன்கோவில், ராஜபாளையம், தேனி செல்லும் பேருந்துகளும், தாழையூத்து வழியாக கோவில்பட்டி, மதுரை, திருச்சி, சென்னை செல்லும் நூற்றுக்கணக்கான பேருந்துகளும், பெங்களூர், ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளும் தினசரி செல்கின்றன.

மேலும் இச்சாலையில் தினசரி இருசக்கர, நான்குசக்கர மற்றும் கனரக வாகனங்கள் ஆயிரக்கணக்கில் செல்கின்றன. நெல்லை மாநகரில் வாகன போக்குவரத்து அதிகமுள்ள இந்த பிரதான சாலையின் ஓரத்தில் மேடும் பள்ளமுமாக மாறி இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவதோடு, வாகன விபத்துகள் ஏற்படவும் வழிவகுக்கிறது. இதனால் இந்த பைபாஸ் சாலையின் ஓரத்தில் காலை, மாலை வேளைகளில் நடைபயிற்சி செய்யும் நபர்களும் வாகன விபத்துகளில் சிக்கியுள்ளனர்.

எனவே இச்சாலையை சீரமைத்து வாகன விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத் துறையினரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Related Stories:

>