ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு

பவானி: ஈரோடு மாவட்டம் பவானி தொகுதிக்குட்பட்ட 151 மையங்களில் இன்று (12ம் தேதி) நடைபெறும் மெகா கொரோனா தடுப்பு முகாமில் தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு குலுக்கல் முறையில் தங்கக் காசுகள், வெள்ளி விளக்கு, புடவைகள்,வேட்டிகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என வருவாய்த்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் கூறியதாவது: கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில், 18 வயதுக்கு மேற்பட்ட 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக, பவானி சட்டமன்றத் தொகுதியில் பவானி வட்டாரத்தில் 86 மையங்கள், அம்மாபேட்டை வட்டாரத்தில் 65 மையங்கள் என 151 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் பங்கேற்று கொரோனா தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படுகிறது.

முதல் பரிசு ஒரு கிராம் தங்கக் காசு 2 பேருக்கும், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி விளக்கு ஒருவருக்கும், மூன்றாம் பரிசாக ரூ.500 மதிப்புள்ள புடவைகள், ரூ.500 மதிப்புள்ள வேஷ்டிகள் தலா 5 பேருக்கு வழங்கப்படும். ஆறுதல் பரிசாக 3 பேருக்கு தலா ரூ.300 மதிப்புள்ள ரீசார்ஜ் கூப்பன்கள் வழங்கப்படும். இத்திட்டம், பவானி, அம்மாபேட்டை பகுதிகளைச் சேர்ந்த பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களுக்கு மட்டுமே பொருந்தும். பல்வேறு தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரையில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில் 18 வயது பூர்த்தியான அனைவரும் பங்கேற்று தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும்.  இவ்வாறு தாசில்தார் முத்துகிருஷ்ணன் கூறினார். பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொது மக்கள் பயனடையும் வகையில் நடைபெறும் தடுப்பூசி முகாமுக்கு தங்கக்காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்குவதாக நூதன முறையில் வருவாய் துறையினர் அழைப்பு விடுத்துள்ளது அனைத்து தரப்பு மக்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More
>