×

தடுப்பூசியில் சாதனை படைத்த தமிழ்நாடு: மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் இதுவரை 21.16 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்..!

சென்னை: தமிழகத்தில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்த நிலையில் இலக்கை தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 40 ஆயிரம் மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 40 ஆயிரம் மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சம் பேருக்கு மெகா தடுப்பூசி முகாம் இன்று ெதாடங்கியது.

வருவாய், உள்ளாட்சி அமைப்புகள், (கிராம மற்றும் நகர), கல்வித்துறை, யுனிசெப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் இணைந்து முகாமை நடத்தி வருகின்றன. கொரோனா தடுப்பூசி வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திய பிறகு ஏதாவது பின்விளைவுகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள அனைத்து மையங்களிலும் சிகிச்சை கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பெரியவர்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா தொற்று தொடர்பான அறிகுறிகள் இருந்தால் மையங்களில் அனுமதிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி பெறுபவர்களுடன் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதிகள், தொலை தூரப்பகுதிகள், கேரள மாநிலத்தை ஒட்டிய பகுதிகளில் மற்றும் பிற மாநிலங்களுக்கு ஒட்டிய பகுதிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இப்பணியில்  சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் பெரும் முயற்சியின் விளைவாக, ஒன்றிய அரசிடமிருந்து போதுமான தடுப்பூசி பெறப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் இன்று 1,600 தீவிர தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது. இதன்மூலம் சுமார் 3.50 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி 1,600 தடுப்பூசி முகாம்கள் அமைந்துள்ள இடங்களின் விவரங்களை பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ளூம் வகையில்  சென்னை மாநகராட்சியின் சார்பில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  அதன்படி தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை  பொதுமக்கள் https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega_vac_det.jsp என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாகவும், 044 - 2538 4520, 044 - 4612 2300 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்த நிலையில் இலக்கை தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இரவு 7 மணி வரை முகாம் நடைபெறவுள்ள நிலையில், மாலை 4.35மணிக்கே 21.16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.


Tags : Tamil Nadu ,Health Department ,mega corona vaccine camp , The government has achieved the target of vaccinating only 20 lakh people in Tamil Nadu today ..!
× RELATED ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம்...