2 ஒன்றிய அமைச்சர், துணை முதல்வர், எம்பி, லட்சத்தீவு அதிகாரி உட்பட குஜராத் முதல்வர் பதவிக்கு 6 பேர் இடையே கடும் போட்டி..!

அகமதாபாத்: குஜராத் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய முதல்வர் பதவிக்கான போட்டியில் 6 பேரின் பெயர்கள் அடிபடுகிறது. புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 2 ஒன்றிய அமைச்சர்கள் குழுவின் தலைமையில் நடக்கிறது. அப்போது, புதிய முதல்வர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத்தில் அடுத்தாண்டு பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், ஆளும்  பாஜகவுக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கடுமையான நெருக்கடியை  கொடுக்க தொடங்கிவிட்டன. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கூட, ஆளும்  பாஜகவுக்கு பின்னடைவே ஏற்பட்டது. முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில்  ஆளும் பாஜகவுக்கு காங்கிரஸ் கடுமையான போட்டியை  ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் படேல் சமூகத்தினரின் ஒருங்கிணைப்பு  இருந்தது. இருந்தாலும், பாஜக வெற்றிப் பெற்று விஜய் ரூபானி முதல்வரானார்.  தேர்லுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், முதல்வர் விஜய் ரூபானி  தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.

அதனால் அடுத்த முதல்வர்  பட்டியலில் பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இருந்தும், விஜய்  ரூபானியின் திடீர் ராஜினாமா குறித்தும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.  அதாவது, கொரோனா இரண்டாம் அலையின் போது, குஜராத் அரசு சரியாக செயல்படவில்லை  என்று அம்மாநில உயர்நீதிமன்றம் கண்டித்தது. கொரோனா இறப்புகள் தொடர்பாக  புள்ளிவிபரங்களை முதல்வர் அலுவலகம் மறைத்ததாக சர்ச்சையும் ஏற்பட்டது. இதன்  காரணமாக, ரூபானியின் மீது பிரதமர் மோடி மற்றுமின்றி கட்சி தலைமையும்  அதிருப்தியில் இருந்தது. வரும் தேர்தலில் விஜய் ரூபானி மற்றும் மாநில  பாஜகவுக்கு பெரும் எதிர்ப்பு இருக்கும் என்பதால், அதனை சமாளிக்கவும் படேல்  சமூக வாக்குகளை கவருவதற்காகவும் விஜய் ரூபானி (ஜெயின் சமூகம்) தனது பதவியை ராஜினாமா  செய்ததாக கூறப்படுகிறது. குஜராத்தின் புதிய முதல்வர் பட்டியலில், துணை முதல்வர் நிதின் படேல், மாநில வேளாண் அமைச்சர் ஆர்.சி.பால்து, ஒன்றிய அமைச்சர்கள் பூர்ஷோட்டம் ரூபாலா, மன்சுக் மண்டவியா உள்ளிட்டோரின் பல பெயர்கள் அடிபடுகிறது.

அடுத்த தேர்தலுக்கு முன்பாக பெரும்பான்மையாக உள்ள படேல் சமூகத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக்கி விட்டால், வரும் தேர்தலில் எளிதாக வெற்றிப் பெற்றுவிடலாம் என்று பாஜக வியூகங்களை வகுத்து வருகிறது. புதிய முதல்வர் பதவிக்கான போட்டியில், தற்போதைக்கு ஆறு பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. அவர்களில் மன்சுக் மண்டவியா கடந்த சில மாதங்களுக்கு  முன்னர்தான் ஒன்றிய அமைச்சராக பதவியேற்றதால், அவருக்கு வாய்ப்பு குறைவாகவே இருக்கும் எனக்  கூறப்படுகிறது. புதிய முதல்வரை ேதர்வு செய்வதற்கான நடைமுறைகளை பாஜகவின்  தேசிய தலைமை தொடங்கிவிட்டது. புதிய முதல்வர் யார்? என்பதை தேர்வு  செய்வதற்காக ஒன்றிய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் பிரகலாத் ஜோஷி  ஆகியோர் அடங்கிய குழுவை நேற்றிரவு பாஜக தலைமை நியமித்துள்ளது. இவர்கள்  இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் வருகிறார்கள். இன்று மாலை 3 மணியளவில்  பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது, அடுத்த முதல்வர் யார்?  என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும். புதிய முதல்வரின் பதவியேற்பு அடுத்த  வாரம் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத்தின் புதிய முதல்வர் பட்டியலில் உள்ள 6 பேரின் பின்னணி விபரம் வருமாறு:

நிதின் படேல்

குஜராத் துணை முதல்வரான நிதின் படேல், கடந்த 2001ம் ஆண்டில் நிதியமைச்சராக பணியாற்றினார். ஆறு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வடக்கு குஜராத்தின் படேல் சமூகத்தை சேர்ந்த இவர், கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்டில் ஆனந்திபென் படேல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபோது, நிதின் படேல்தான் அடுத்த முதல்வர் என்று பேசப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் வாய்க்கு எட்டியது கைக்கு எட்டவில்லை என்பது போல், விஜய் ரூபானி முதல்வராக அறிவிக்கப்பட்டார்.

மன்சுக் மண்டவியா

ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக சமீபத்தில் பதவிக்கு வந்த மன்சுக் மண்டவியாவும் குஜராத்தின் புதிய முதல்வர் போட்டியில் உள்ளார். பிரதமர் மோடி மட்டுமின்றி, அமித் ஷாவின் நம்பகமான மனிதராக இருக்கிறார். கொரோனா பாதிப்பின் போது மாநில பாஜக அரசின் ‘இமேஜ்’ மோசமடைந்த போது, அதனை அதில் இருந்து மீண்டவராக கருதப்படுகிறது. படேல் சமூகத்தை சேர்ந்தவர் என்பது மட்டுமின்றி, கட்வா மற்றும் லியுவா படேல் சமூக மக்களிடமும் அவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இதுதவிர, குஜராத் பாஜகவில் உள்ள பெரும்பாலான தலைவர்களுடனும் அவருக்கு நல்ல உறவு உள்ளது.

புருஷோட்டம் ரூபாலா

படேல் சமூக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தலைவராக இருப்பவர் புருஷோட்டம் ரூபாலா. தற்போது ஒன்றிய அரசின் மீன்வளத்துறை, கால்நடை வளர்ப்பு துறை இணை அமைச்சராக உள்ளார். கடந்த 1980ம் ஆண்டு வாக்கில் பாஜகவில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1991ம் ஆண்டில் நடந்த அம்ரேலி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் தற்போது இந்த தொகுதியின் எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.

சி.ஆர்.பாட்டீல்

பிரதமர் மோடியின் நம்பகமான தலைவராக சி.ஆர்.பாட்டீல் பெயர் அடிபடுகிறது. தனது சூரத் நாடாளுமன்றத் தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேம்படுத்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றவர். அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் புதியதாக நியமிக்கப்பட்ட 281 உறுப்பினர்களைக் கொண்ட குழுவின் தலைவராக சி.ஆர்.பாட்டீல் உள்ளார்.

கோர்த்தான் ஜட்ஃபியா

கடந்த 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது, அப்போதைய மாநில அரசில் உள்துறை அமைச்சராக கோர்த்தான் ஜட்ஃபியா இருந்தார். இவருக்கும் அப்போதைய முதல்வராக இருந்த பிரதமர் மோடிக்கும் அடிக்கடி மோதல்கள் இருந்தன. ஆனால், மாநில பாஜக வளர்ச்சியில் இவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. மோடியிடம் ஏற்பட்ட கசப்பான சில அனுபவங்களால், குறிப்பிட்ட மாதங்கள் கட்சியில் இருந்து விலகி இருந்தார். அதன்பின், உத்தரபிரதேச தேர்தலின் போது, அவருக்கு அங்கு தேர்தல் பொறுப்பு வழங்கப்பட்டது. அங்கு பாஜக ஆட்சிக்கு வருவதற்கு வியூகங்களை வகுத்து கொடுத்து வெற்றி பெற்றதால், தற்போது கட்சியில் செல்வாக்கு மிக்கவராக வலம் வருகிறார்.

பிரஃபுல் படேல்

டையூ-டாமன்-தாத்ராநகர் ஹவேலி மற்றும் அந்தமான்-நிக்கோபார் மற்றும் லட்சத்தீவின் தலைமை நிர்வாகி பிரஃபுல் கோடா படேல் பெயரும் அடிபடுகிறது. இவர், 2007ம் ஆண்டில் ஹிம்மத்நகர் தொகுதியில் முதன்முறையாக எம்எல்ஏவாக தேர்தெடுக்கப்பட்டார். மேலும் 2010 முதல் 2012ம் ஆண்டு வரை குஜராத் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். தற்போது லட்சத்தீவின் தலைமை நிர்வாகியாக இருக்கும் நிலையில், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து வந்தார்.

Related Stories:

More
>