ஐதராபாத் அணியில் பேர்ஸ்டோவுக்கு பதில் ரூதர்போர்டு: பஞ்சாப் கிங்ஸ்-ல் மார்க்ரம் இடம்பிடித்தார்

மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா 2-வது அலை உச்சத்தில் இருந்தபோது ஐ.பி.எல். போட்டி நடத்தப்பட்டு வந்தது. மே மாதம் முதல் வாரத்தில் வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் ஐ.பி.எல். போட்டிகள் ரத்து செய்யப்பட்டு, பின்னர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடரின் முதல் பகுதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட 2-வது பகுதி ஆட்டங்கள் வரும் 19-ந்தேதி தொடங்குகின்றன. இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளதையடுத்து சர்வதேச முன்னணி வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

இங்கிலாந்து அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பேர்ஸ்டோவ் ஐதராபாத் அணியில் இருந்தும், டேவிட் மலன் பஞ்சாப் அணியில் இருந்தும் விலகியுள்ளனர். இவர்கள் சொந்த காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து டேவிட் மலனுக்கு மாற்று வீரராக தென்னாப்பிரிக்காவின் முன்னணி பேட்ஸ்மேனான மார்க்ரமை பஞ்சாப் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதுபோல் ஐதராபாத் அணியில் பேர்ஸ்டோவுக்கு மாற்றாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷெர்பானே ரூதர்போர்டை (23) ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து சன்ரைசர்ஸ் நிர்வாகம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “2-வது கட்ட ஐபிஎல் டி20 தொடரில் அதிரடி கரிபீயன் பேட்ஸ்மேன் ஷெர்பானே ரூதர்போர்டு, பேர்ஸ்டோவுக்குப் பதிலாக எங்கள் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளது. இடதுகை பேட்ஸ்மேனான ரூதர்போர்டு கடந்த 2020ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். இவர் இதுவரை 6 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் கரீபியன் டி20 தொடரில் செயின்ட்கிட்ஸ் நெவி பேட்ரியாட்ஸ் அணியில் ஆடிவரும் ரூதர்போர்டு 7 போட்டிகளில் 3 அரைசதங்கள் உள்ளிட்ட 201 ரன்கள் குவித்துள்ளார். ரூதர்போர்டு ஸ்ட்ரைக் ரேட் 136 ஆக உள்ளது.

Related Stories:

More