×

யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம்: மகளிர் ஒற்றையர் டென்னிஸில் எம்மா ராடுகனு சாம்பியன்..! இளம் வயதிலேயே புதிய சாதனைகள் படைத்தார்

நியூயார்க்: இங்கிலாந்தின் இளம் வீராங்கனை எம்மா ராடுகனு, பல்வேறு புதிய சாதனைகளுடன் யு.எஸ். ஓபன் மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார். நியூயார்க்கில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த யு.எஸ்.ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பைனலில் இங்கிலாந்தின் எம்மா ராடுகனும், கனடாவின் லேலா பெர்னாண்டசும் மோதினர். எம்மா ராடுகனுக்கு 18 வயது. லேலாவுக்கு 19 வயது. இருவருமே டீன்-ஏஜை தாண்டவில்லை. இருவருக்குமே இது முதல் கிராண்ட்ஸ்லாம் பைனல் என்பதால், முதல் செட்டை மிகவும் எச்சரிக்கையுடன் துவக்கினர். தற்காப்பு முறையை கடைபிடித்தனர். பேஸ் லைனில் நின்று, பிளேஸ்மென்ட்டில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தினர். இதனால் முதல் 22 நிமிடங்களில் 3 கேம்கள் மட்டுமே முடிந்திருந்தன. 2-1 என எம்மா ராடுகனு முன்னிலையில் இருந்தார். ஆனாலும், 4 கேமில் லேலா பதிலுக்கு, ராடுகனுவின் சர்வீசை பிரேக் செய்ய ஆட்டம் சமநிலையை எட்டியது. 5-4 என்ற நிலையில் லேலாவின் கேமை, கடும் போராட்டத்திற்கு பின்னர் பிரேக் செய்து, 6-4 என முதல் செட்டை ராடுகனு கைப்பற்றினார்.

2வது செட்டில் ராடுகனு ஆதிக்கம் செலுத்தினார். 5-3 என்ற கணக்கில் முன்னிலையை எட்டினார். அடுத்த ராடுகனுவின் கேமில் இறுதியாக போராடி பார்த்தார் லேலா. அந்த கேமில் 40-40 என இருவரும் புள்ளிகளை எடுத்தனர். அதிரடியாக நெட்டுக்கு ஏறிய ராடுகனு, அட்வான்டேஜ் பெற்றார். அதில் அனலாக ஒரு ஏஸ் சர்வீசை போட்டுத் தாக்க, அரங்கமே அதிர்ந்தது. 6-4, 6-3 என நேர் செட்களில் லேலாவை வீழ்த்தி, யு.எஸ். ஓபன் மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை எம்மா ராடுகனு வென்று, டென்னிஸ் உலகை மிரட்டிவிட்டார். இது சாதாரண வெற்றியல்ல. இந்த வெற்றியின் மூலம் எம்மா ராடுகனு பல்வேறு சாதனைகளை எட்டியுள்ளார். 18 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது, மிகப்பெரிய சாதனை. கடந்த 2004ம் ஆண்டு ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா, தனது 18வது வயதில் விம்பிள்டனில் மகளிர் ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றினார். இப்போது எம்மா ராடுகனு, 2வது வீராங்கனையாக அந்த வரிசையில் இடம் பிடித்துள்ளார்.

ராடுகனு சர்வதேச டென்னிசில் காலடி எடுத்து வைத்து, இன்னும் முழுதாக 3 மாதங்கள் முடியவில்லை. இதுவரை டபிள்யூடிஏ தரத்தில் ஒரு பட்டத்தை கூட அவர் கைப்பற்றவில்லை. எடுத்த எடுப்பிலேயே கிராண்ட்ஸ்லாம் கோப்பையை தூக்கி விட்டார். இந்த ஆண்டு விம்பிள்டனில் 4வது சுற்று வரை முன்னேறி, எல்லோரையும் சற்று திரும்பி பார்க்க வைத்தார். அடுத்து இந்த யு.எஸ்.ஓபனில் தகுதி சுற்றில் ஆடி வெற்றிகளை பெற்று, அறிமுக வீராங்கனையாக மெயின் சுற்றுக்கு தகுதி பெற்றார். கிராண்ட்ஸ்லாமில் அறிமுக வீராங்கனையாக நுழைந்து, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது மிகப் பெரிய சாதனை. இந்த யு.எஸ்.ஓபனில் முதல் சுற்றில் இருந்து இறுதிப்போட்டி வரை அவர் ஒரு செட்டைக் கூட இழக்கவில்லை என்பதும் சாதனைதான்.

காலிறுதி, அரையிறுதி, இறுதிப்போட்டி என அனைத்து போட்டிகளிலும் நேர் செட்களில் வெற்றி பெற்றுள்ளார். அறிமுக வீராங்கனையின் இந்த சாதனை, உண்மையிலேயே மிரட்டல்தான் என்று முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் பாராட்டியுள்ளனர். இங்கிலாந்தின் விர்ஜினியா வேட், கடந்த 1977ம் ஆண்டு விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாமில் மகளிர் ஒற்றையர் பட்டம் வென்றுள்ளார். 44 ஆண்டுகள் கழித்து தற்போது எம்மா ராடுகனு, யு.எஸ்.ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். மகளிர் ஒற்றையர் தரவரிசையில் 150வது இடத்தில் இருந்த ராடுகனு, இந்த வெற்றியின் மூலம், அதிரடியாக 23வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து ரசிகர்கள் இந்த வெற்றியை ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.



Tags : U.S. Open Grand Slam ,Emma Radukanu , U.S. Open Grand Slam: Emma Radukanu Champion in Women's Singles Tennis ..! He set new records at a young age
× RELATED அமெரிக்க ஓபன் டென்னிஸ்!: பிரிட்டன்...