வேலூர் சத்துவாச்சாரியில் மற்றொரு ஆக்கிரமிப்பு; அகற்றப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தின் இடத்தை ஓலை தட்டிகள் வைத்து சுற்றி வளைப்பு: சர்வேயர்கள் மூலம் அளந்து மீட்க கோரிக்கை

வேலூர்: வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி, வள்ளலார் எஸ்டைப் பகுதியில் அரசு புறம்போக்கு இடம், நீர்வழித்தடங்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தது. இந்த ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக துணை தாசில்தார் தடையில்லா சான்று வழங்கியிருந்ததும் ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவின்பேரில் தடையில்லா சான்று ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அரசுபுறம்போக்கு இடத்திற்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்று குறித்து கணக்கெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு வீடுகள் ஓரிரு நாட்களில் அகற்றப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இதற்கிடையே முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தது போல, வேலூர் சத்துவாச்சாரியில் மற்றொரு ஆக்கிரமிப்பு அரங்கேறியுள்ளது. வேலூர் சத்துவாச்சாரி சிஎம்சி காலனி 4வது தெருவில் தண்டுமாரியம்மன் கோயில் பின்புறம் கடந்த 10 ஆண்டுகளுக்கு ேமலாக அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அங்கு இயங்கி வந்த அங்கன்வாடி கட்டிடத்திற்கு பதிலாக மற்றொரு இடத்தில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதனால், ஏற்கனவே இயங்கி வந்த அங்கன்வாடி கட்டிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது.

அகற்றப்பட்ட கட்டிடத்தின் அருகே உள்ளவர்கள் மாநகராட்சிக்கு சொந்தமான அங்கன்வாடி கட்டிடத்தின் இடத்தினை ஓலை தட்டிகள் வைத்து ஆக்கிரமித்துள்ளதாகவும், அப்பகுதியில் உள்ள வீடுகள் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இப்படி மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் அதிகளவில் ஆக்கிரமிப்பின்பிடியில் சிக்கியுள்ளது. எனவே சர்வேயர் வைத்து அளந்து ஆக்கிரமிப்புகளை மீட்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

More
>