×

12,959 கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாதம் 1000 ஊக்கத்தொகை: புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959 கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு 1000 மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,291 கோயில்கள் உள்ளன. இதில், 34,111 கோயில்களில் ஆண்டுக்கு 10 ஆயிரத்துக்கும் குறைவாக தான் வருவாய் வருகிறது. இதனால் பெரும்பாலான கோயில்களில் பூஜை நடத்த முடியாத நிலை இருந்தது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஒவ்வொரு கோயிலுக்கும் 1 லட்சம் முதலீட்டு தொகை அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு கால பூஜை திட்டம் மாநிலம் முழுவதும் 12,959 கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அந்த நிதியும் போதுமானதாக இல்லை என்ற நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் 2 லட்சமாக முதலீட்டு தொகையை அதிகரித்து அறிவித்தது. இந்த நிதியை கொண்டு கோயில்களில் ஒரு கால பூஜை திட்டம் தங்கு தடையின்றி தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படுவதில்லை. அவர்கள் தட்டுக்காசை மட்டுமே நம்பியிருக்கும் நிலை இருந்தது. இதனால், அவர்கள் தங்களது குடும்பத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே, கடந்த 10 ஆண்டுகளாக ஒரு கால பூஜை திட்டத்தில் உள்ள கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர்களது கோரிக்கை ஏற்கபடவில்லை. இந்நிலையில், திமுக ஆட்சி பொறுப்ேபற்ற நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கிராம கோயில் பூசாரிகள் நலச்சங்கம் சார்பில் அர்ச்சகர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று கடிதம் அளித்தனர்.  இதையேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஒரு கால பூஜை திட்டம் செயல்படுத்தப்படும் 12,959 கோயில்களில் மாத ஊக்கத்தொகை 1000 வழங்கப்படும் என்றும், அர்ச்சகர்கள் மற்றும் கோயில் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் 6 இடங்களில் 21 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும் என்றும் சட்டப்பேரவையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

இந்த அறிவிப்பை உடனே நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில் தமிழகத்தில் உள்ள ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பணிபுரியும் 12,959 அர்ச்சகர்கள், பட்டாச்சார்யர்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவில், இத்திட்டத்தை செயல்படுத்துவதன் அடையாளமாக 250 பேருக்கு மாத ஊக்கத்தொகை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏ அசன் மவுலானா, அரசு செயலாளர் சந்தரமோகன், ஆணையர் குமரகுருபரன், திருவாவடுதுறை ஆதீனம் மத் திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் ல சிவஞான பாலய சுவாமிகள், ராமநாதபுரம் சமஸ்தானத்தின் பரம்பரை தர்மகர்த்தா ராணி  ராஜராஜேஸ்வரி, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.   

பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:  அறநிலையத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய சேகர்பாபு இந்த அறநிலையத்துறையினுடைய பொறுப்பை ஏற்றுக் கொண்டு அவர் எப்படி எல்லாம் பணியாற்றி கொண்டு இருக்கிறார் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். அவரை சேகர்பாபு என்று அழைப்பதைவிட ‘செயல்பாபு’ என்று தான் அழைக்க வேண்டும். அந்த பெயருக்கு முழுத் தகுதி படைத்தவராக அவர் விளங்கிக்கொண்டு இருக்கிறார்.  இந்து சமய அறநிலையத் துறை கொடுத்து வைத்த துறையாக சேகர்பாபுவால் மாற்றப்பட்டு இருக்கிறது. 24 மணி நேரமும் செயல்படக் கூடிய அமைச்சராக நம்முடைய அமைச்சர் சேகர்பாபு விளங்கிக்கொண்டு இருக்கிறார். கோயில் நிலங்கள் மீட்கப்படுகின்றன. கோயில் சொத்துகளும் மீட்கப்படுகிறது.  அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.  தமிழில் வழிபாடு செய்யப்படக்கூடிய ஒரு அற்புதம் இந்த துறையின் மூலமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

 இறைவனைப் போற்றும் போற்றிப் பாடல் புத்தகங்கள் வெளியாகி உள்ளது. அர்ச்சகர்களுக்கு 4 ஆயிரம் நிதி தரப்பட்டுள்ளது. 15 வகையான பொருட்கள் தரப்பட்டுள்ளது. இன்னும் ஒரு அற்புதத்தை நான் சொல்லியாக வேண்டும். இந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, ஒவ்வொரு துறையினுடைய மானியக் கோரிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதம் நடந்து, அவை எல்லாம் நிறைவேற்றப்பட்டு கொண்டு இருக்கிறது, தாக்கல் செய்யப்பட்டு கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு துறையின் சார்பில் ஒவ்வொரு அமைச்சர்களும், அவரவர்களுடைய துறையின் சார்பில் என்ன செய்யப் போகிறோம் என்பதை அறிவிப்புகளாக வெளியிடுவது வழக்கம்.  அந்த வகையில் அறநிலையத் துறையின் சார்பில் நம்முடைய சேகர்பாபு இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பதிலளித்து பேசி அதற்கு பிறகு அறிவிப்புகளை வெளியிட்டார். எவ்வளவு அறிவிப்புகள் என்று கேட்டீர்களானால், இதுவரை யாரும் செய்யாத, சட்டமன்றத்திலே இதுவரை இல்லாத வகையில், 120 அறிவிப்புகளை நம்முடைய சேகர்பாபு சட்டமன்றத்தில் அறிவித்தார். இது ஒரு பெரிய சாதனை. ஏராளமான கோயில் திருப்பணிகள் நடக்க இருக்கிறது. புதிய தேர்கள் வலம் வரப் போகின்றன. அதுமட்டுமல்ல, இதுவரைக்கும் இல்லாத வகையிலே, கோயில் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன.  அதுதான் மிகமிக முக்கியமான ஒன்று.  

அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டித் தரப்பட உள்ளன. இவை அனைத்தும் செய்து முடிக்கப்பட்டால் அறநிலையத்துறையின் பொற்காலம் இன்னும் சில மாதங்களில் உருவாகப் போகிறது, அந்தக் காட்சியை நாம் பார்க்கத்தான் போகிறோம். அந்த வரிசையில் இன்றைய நாள், ஒருகால பூஜை திட்டத்தின்கீழ் உள்ள 12,959 கோயில்களை சேர்ந்த அர்ச்சகர்கள், பட்டாச்சார்யர்கள், பூசாரிகளுக்கு மாதம்தோறும் 1000 வழங்கும் திட்டத்தை நான் தொடங்கி வைத்துள்ளேன். இதன்மூலமாக அரசுக்கு ஆண்டுதோறும் 13 கோடி கூடுதலாகச் செலவாகும். இதன்மூலமாக ஏறத்தாழ 13 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வு பெறுகிறார்கள் என்பதை நினைத்து பெருமைப்படுகிறோம். ஒருகால பூஜை நடக்கும் கோயில்களுக்கான வைப்பு நிதி 2 லட்சம் ஆக அதிகரித்தும் தரப்பட்டுள்ளது. இதன்மூலமாக ஒருகால பூஜை நடக்கும் கோயில்களில் வழிபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகளின் வாழ்க்கைக்கும் உத்தரவாதம் தரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நான் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறேன்.

சட்டமன்றக் கூட்டத் தொடர் வருகிற 13ம் தேதி முடிய இருக்கிறது. அதன்பிறகு சட்டமன்றத்தில் என்னென்ன அறிவிப்புகளை செய்திருக்கிறோமோ, அவற்றை எல்லாம் படிப்படியாக ஒவ்வொன்றாக நிறைவேற்ற அதற்கான திட்டங்களை நாங்கள் வகுத்து இருக்கிறோம். வெறும் அறிவிப்போடு எந்த திட்டமும் நின்றுவிடாது, அதனை மாதம்தோறும், ஆய்வுக் கூட்டங்களை அவ்வப்போது நடத்தி அமைச்சர்களையும் அதிகாரிகளையும் நான் கண்காணிக்க போகிறேன். ஒவ்வொரு திட்டங்களுக்கும் நான் முன்னுரிமை கொடுத்து, அதையெல்லாம் நிறைவேற்றுகின்ற முயற்சியிலே ஈடுபட போகிறேன்.  அனைத்துத் துறைகளையும் முந்திக் கொண்டு இப்போது நம்முடைய அமைச்சர் ‘செயல்பாபு’ அவரது துறை சார்பில் திட்டத்தை தொடங்கிவிட்டார். இன்னும் சட்டமன்றம் முடிந்து, ஆய்வுக் கூட்டம் நடத்தப்படவில்லை, அதற்கு முன்பே ஒரு வார காலத்தில் இந்த திட்டத்தை தொடங்கி இருக்கிறார் என்றால் அவர் சேகர்பாபு அல்ல, செயல்பாபு என்பதை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொண்டு, அனைத்து அறிவிப்புகளையும் நிச்சயமாக நான் நிறைவேற்றுவேன் என்ற உறுதியை தருகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Chief Minister ,MK Stalin , Priests, Chief MK Stalin
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...