×

கடலோர பகுதிகளில் கட்டுமானங்களுக்கு முன் அனுமதி விவகாரம்: சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிவிப்பாணைக்கு தடை கோரி வழக்கு: ஒன்றிய அரசு, தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை:  சென்னை உயர் நீதிமன்றத்தில், நொச்சிக்குப்பத்தை சேர்ந்த கே.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ கடல் வளங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்கான, 2011ல் வெளியிடப்பட்ட கடலோர ஒழுங்கு மண்டல அறிவிப்பாணையை, நீர்த்துப்போக செய்யும் வகையில் ஒன்றிய சுற்றுச்சுழல் அமைச்சகம் கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஒரு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. கடலோர ஒழுங்குமுறை மண்டலங்களில் கட்டிட பணிகளை தொடங்கியபிறகும் அனுமதி பெறும் வகையில் ஒன்றிய அரசுஅறிவிப்பாணையை தெரிவித்துள்ளது. இதனால், கடலோரங்களில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிப்பதுடன் மீன் வளமும் பாதிக்கும். எனவே, விதிமுறைகளுக்கு முரணாக வெளியிடப்பட்ட ஒன்றிய அரசின் அறிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும். அந்த அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘‘2011 கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணையில் கடலோர பகுதிகளில் நடைபெறும் கட்டுமானங்களுக்கு சுற்றுச்சுழல் துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், ஒன்றிய அரசு கடந்த பிப்ரவரி 19ல் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கட்டிட பணிகள் தொடங்கிய பிறகும் அனுமதி பெறலாம் என்று கூறப்பட்டிருப்பது கடலோர மண்டலங்களில் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புக்கு வழி வகுத்துவிடும். ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பாணையால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் நீர்த்துப்போய்விடும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் ஒன்றிய அரசும், தமிழக அரசும் 3 வாரங்களுக்குள் பதில் தர வேண்டும்’’ என்று உத்தரவிட்டு விசாரணையை 5 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Ministry of Environment ,Govt. , Environmental Notice, Government of Tamil Nadu, Notice
× RELATED வாக்கு எண்ணிக்கை மையமான அரசு...