×

கொடநாடு விவகாரம், மாஜி அமைச்சர்களின் மோசடிகளுக்கு உதவி: 8 பத்திரப்பதிவு அதிகாரிகளிடம் சென்னையில் விசாரணை: நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: கொடநாடு விவகாரம் மற்றும் மாஜி அமைச்சர்களின் மோசடிக்கு உதவிய 8 பத்திரப்பதிவு அதிகாரிகளை சென்னைக்கு வரவழைத்து அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடைபெற்றது. அதில், அமைச்சர்களும், அதிகாரிகளும் சேர்ந்து கூட்டு கொள்ளையடித்து வந்ததாக புகார்கள் எழுந்தன. இதனால் 2016ம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் அனைத்து அமைச்சர்களையும் ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அடைத்து வைத்து ஜெயலலிதா விசாரணை நடத்தினார். அப்போது தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் அமைச்சர்களாக இருந்தவர்கள் பல நூறு கோடிகளில் முதலீடுகளை செய்திருப்பது தெரியவந்தது. அதில் மூத்த அமைச்சர்களாக இருந்த 5 பேரிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை ஜெயலலிதா பறிமுதல் செய்தார். இந்த ஆவணங்கள் அனைத்தும் கொடநாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.மேலும் மாஜி அமைச்சர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்கள் அனைத்தும், தங்களுக்கு வேண்டிய குறிப்பாக கோவையில் பணியாற்றும் சசிகலாவுக்கு நெருக்கமான மாவட்ட பதிவாளர், ஊட்டியைச் சேர்ந்த மாவட்ட பதிவாளர் ஆகியோர் மூலம் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கோவையில் பணியாற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலாவின் உறவினர் ராவணனுக்கு மிகவும் நெருக்கமானவர். ராவணன் மூலம்தான் மாவட்ட பதிவாளர் கோவைக்கு மாறுதல் வாங்கி வந்தார். கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜனும், கோவை மாவட்ட பதிவாளரும் நெருங்கிய உறவினர்கள். இதனால் மாவட்ட பதிவாளர் அடிக்கடி கொடநாடு சென்று வருவார். அடிக்கடி உயர் அதிகாரிகளிடமே சசிகலாவை பார்த்து விட்டு வருவதாக கூறுவார். இதனால் கடந்த 10 ஆண்டுகளில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்தவர்், இந்த மாவட்ட பதிவாளருக்கு அடங்கியே நடந்தனர்.

 ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வேலுமணியின் தீவிர ஆதரவாளராக மாவட்ட பதிவாளர் மாறிவிட்டார். கடந்த நான்கரை ஆண்டுகாலம் எடப்பாடி முதல்வராக இருந்தாலும் மேற்கு மண்டலத்தைப் பொறுத்தவரை வேலுமணிதான் முதல்வராக இருந்தார். இதனால், அவர் மூலம் அந்த மண்டலத்தின் பத்திரப்பதிவு அதிகாரியாக கோவை மாவட்ட பதிவாளர்தான் செயல்பட்டு வந்துள்ளார். கீழ் மட்ட ஊழியர் முதல் டிஐஜிக்கள் வரை இவரிடம் அனுமதி பெற்றுத்தான் பணி நியமனங்கள் நடைபெற்று வந்தன. மேலும் அமைச்சருக்காக ஒவ்வொரு மாதமும் வசூலிலும் ஈடுபட்டு வந்தார். இதனால் வேலுமணி வீட்டில் பதவிக்காக அதிகாரிகள் காத்திருப்பதுபோல், மாவட்ட பதிவாளர் வீட்டிலும் பதிவுத்துறை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை காத்திருந்தனர். கடந்த 10 ஆண்டுகளில் இவர் பல நூறு கோடி சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். மேலும், பணம் மதிப்பிழப்பின்போது மேற்கு மண்டல அமைச்சர்கள் பலர் தங்கள் வைத்திருந்த பல நூறு கோடி கருப்பு பணத்தை மாற்ற முடியாமல் தவித்து வந்தனர். அப்போது இவர்தான் அவர்களுக்கு ஐடியா கொடுத்து சொத்துக்களை பினாமி பெயரில் வாங்கும்படி கூறியுள்ளார்.

அதனால் பல நூறு கோடி கருப்பு பணத்தை, 2 மடங்கு பணம் (செல்லாது என்று அறிவிக்கப்பட்டவை) கொடுத்து வாங்கும்படி கூறினார். இதனால் மேற்கு மண்டலத்தில் அதிக அளவில் மட்டுமல்லாது பெரிய அளவில் பத்திரப்பதிவுகள் நடந்துள்ளன. இதற்காக மாவட்ட பதிவாளருக்கு மட்டும் 25 சதவீதம் கமிஷனாக கிடைத்துள்ளது. நிலத்தின் உரிமையாளர்களுக்கு 2 மடங்கு பணம் கிடைத்துள்ளது. அந்த செல்லாத பணத்தை இந்த மாவட்ட அதிகாரியே ஐடியா கொடுத்து வங்கிகளில் மாற்றும்படி கூறி அதற்கும் கமிஷன் வாங்கியுள்ளார். இது குறித்து தனியாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்துக்குப் பிறகு பெரிய அளவில் பினாமிகளுக்கு பத்திரப்பதிவும் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மாவட்ட பதிவாளர்களிடம் விசாரணை நடத்த ஊட்டி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த தகவல்கள் வெளியானதும், மேற்கு மண்டலத்தில் பணியாற்றும் பத்திரப்பதிவுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் 8 பேரை சென்னைக்கு வரும்படி இரு நாட்களுக்கு முன்னர் பதிவுத்துறை ஐஜி அழைத்துள்ளார். அதில் கோவை மண்டல டிஐஜி சுவாமிநாதன், மாவட்ட பதிவாளர்கள் செல்வக்குமார் (கோவை ஆடிட்), செல்வநாராயணசாமி (நீலகிரி), பெரியசாமி (ஈரோடு) மற்றும் ஈரோடு உதவி ஐஜி ராஜா, கோவை மாவட்ட பதிவு ஐஜி சுரேஷ், கோவை மண்டல பதிவு ஐஜி ராஜ்குமார் உள்பட 8 அதிகாரிகள் உடனடியாக சென்னை வந்தனர். அவர்கள் 8 பேரிடமும் சென்னையில் உள்ள பதிவு அலுவலக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடந்த 10 ஆண்டுகளில் மேற்கு மண்டலங்களில் பதிவு செய்யப்பட்ட பெரிய ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து பதிவுத்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தினர்.


Tags : Chennai , Kodanadu affair, deed, investigation
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...