×

திராவிட இயக்கத்தின் நீட்சியாக இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்: பாரதியை என்றென்றும் நினைவுகூரும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி புகழாரம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை:  பாரதியாருக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் அவரது நினைவு நாளான செப்டம்பர் 11ம் நாள் ஆண்டுதோறும் மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளது தமிழ் சமுதாயத்துக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு, பள்ளி மற்றும் கல்லூரி அளவிலான கவிதைப் போட்டிகள் நடத்தி, 1 லட்சம் பரிசுத் தொகையுடன் பாரதி இளம் கவிஞர் விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பும் பாரதிக்குப் புகழ் சேர்ப்பதாக அமைந்துள்ளது.

பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி, சென்னையில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் வாரந்தோறும் செய்தித்துறை சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்க அரசின் சார்பில் நிதியுதவி அளிக்கப்படும், பாரதியார் படைப்புகளை குறும்படம் மற்றும் நாடக வடிவில் தயாரிக்க நிதியுதவி வழங்கி நவீன ஊடகங்கள் வழியே வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்பன போன்ற 14 அறிவிப்புகள் பாரதியை நேசிப்பவர்களுக்கு நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளன. அந்த அளவுக்கு முழுமையான புகழ் மாலையை பாரதிக்கு முதல்வர் சூட்டியுள்ளார். திராவிட இயக்கத்தின் நீட்சியாக இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பாரதியை என்றென்றும் நினைவுகூரும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டதற்கு தேசிய கட்சியின் தலைவர் என்ற முறையில் மிகுந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : Dirava movement ,Q. ,Stalin ,Bharati ,TN Congress ,K. S. Beauty , Congress, KS Alagiri, Praise
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...