×

அரசியல் பிரமுகர் கொலையில் 2 பேர் கைது: கஞ்சா வியாபாரியை போலீசில் சிக்க வைத்ததால் கொன்றோம்: பரபரப்பு வாக்குமூலம்

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகரை சேர்ந்தவர் வசீம் அக்ரம் (40). மனித நேய ஜனநாயக கட்சி முன்னாள் மாநில துணை செயலாளர். சமூக ஆர்வலராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மசூதியில் தொழுகை முடிந்து தனது 7 வயது மகனுடன் வீட்டிற்கு நடந்து சென்ற அவரை 6 பேர் கொண்ட கும்பல் திடீரென சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இந்த கொலை காரணமாக பேருந்து நிலையம் மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள கடைகள் இழுத்து மூடப்பட்டது. பதற்றம் காரணமாக 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.  வேலூர் சரக டிஐஜி பாபு நேரில் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து 3 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே பாலு செட்டி சத்திரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது வேலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற காரில் இருந்து சிலர் இறங்கி ஓடுவதை கண்ட போலீசார் 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் சென்னை அடுத்த வண்டலூர் அருகே உள்ள ஓட்டேரி யை சேர்ந்த பிரசாந்த் என்கின்ற ரவி, வண்டலூர் பகுதியை சேர்ந்த டில்லி குமார் ஆகியோர் என்பதும், வசீம் அக்ரம் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. கடந்த ஜூலை 7ம் தேதி வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் உள்ள டீல் இம்தியாஸ் என்ற கஞ்சா வியாபாரிக்கு சொந்தமான கிடங்கில் 10 பட்டா கத்தி, 8 கிலோ கஞ்சா, 10 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர். இது தொடர்பாக அவர் உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் போலீசுக்கு டீல் இம்தியாசை காட்டிக்கொடுத்ததற்கு பழிவாங்கவே வசீம் அக்ரமை  கொலை செய்ததாக இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்து, அவர்கள் வந்த கார் மற்றும் காரில் இருந்த 10 அரிவாள்களை பறிமுதல் செய்தனர்.  தப்பி ஓடிய கார் டிரைவர் உட்பட 5 பேரை தேடி வருகின்றனர். கொலையை தொடர்ந்து வாணியம்பாடியில் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


Tags : Prophemy , Political figure, murder, arrest
× RELATED வேளாங்கண்ணி பேராலய பெருவிழா: 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்