×

அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவில் பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடு: தவறு நிரூபணமானால் 7 ஆண்டுகள் வரை சிறை: பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி பரபரப்பு பேட்டி

மதுரை:  கடந்த  அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவில் பல்லாயிரம் கோடி சொத்துக்கள்  முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தவறு செய்தவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல்  7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என அமைச்சர் மூர்த்தி  தெரிவித்தார். மதுரையில் வணிகவரி மற்றும்  பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நேற்று அளித்த பேட்டி:  பதிவுத்துறையை பொறுத்தவரையில் புதிய வணிகர்களாக இருந்தாலும் சரி. தனியார்  மற்றும் பெரிய தொழிலதிபர்களாக இருந்தாலும் சரி. கடன்பெற நேரடியாக பதிவு  அலுவலகம் செல்ல வேண்டியது இருந்தது. இனிமேல் செல்ல வேண்டிய அவசியமில்லை. வங்கிகளில் இருந்து ஆன்லைனில் பதிவு செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம்  நிறைவேற்றி உள்ளோம். கடந்த 2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் பத்திர பதிவு  அலுவலகத்தில் வெளிப்படையாகவே, முறைகேடாக பல ஆயிரம் கோடி சொத்துக்கள் பதிவு  செய்யப்பட்டு மோசடி நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. முக்கியமாக, மனைகள் விளைநிலங்களாகவும், விளைநிலங்கள்  மனை நிலங்களாகவும் அரசு வழிகாட்டு விதிமுறைகளை மீறி பதிவு  செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் உள்ளன. முறைகேடு தொடர்பாக விசாரணை செய்ய உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மதுரையில்  தெருவுக்கு தெரு வழிகாட்டி மதிப்பீடு வேறுபடுகிறது. இது சரிசெய்யப்படும்.  பதிவுத்துறையில் தவறு நடக்கும்பட்சத்தில் சார்-பதிவாளர் மட்டுமல்லாமல்,  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கும் சட்ட வரைவு கொண்டு வரப்படும். இந்த முறைகேட்டில் தொடர்புடைய மற்ற துறையை சேர்ந்தவர்களுக்கும் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெறும் சட்ட வரைவு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் 6 மாதத்திற்குள் பத்திரப்பதிவு மேலும் எளிமைப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். 


Tags : AIADMK ,Bond ,Minister ,Murthy , AIADMK regime, bond abuse
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...