செய்யூர் அருகே பதுங்கி வாழ்ந்த காசிமேடு ரவுடி வெட்டி கொலை: காரில் வந்த மர்ம நபர்களுக்கு வலை

சென்னை:  சென்னை  காசிமேடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (எ) அட்டு ரமேஷ் (44), பிரபல ரவுடி.  இவர்மீது வழிப்பறி, கொள்ளை, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த  2019ம் ஆண்டு காசிமேடு பகுதியை சேர்ந்த ரவுடி சொரி குப்பனை  கொலை செய்த வழக்கில்  அட்டு ரமேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  சில  நாட்களுக்கு முன் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த இவர், காசிமேடு  பகுதியில் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்து, செய்யூர் அடுத்த  கடப்பாக்கம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார்.

இவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதால், காசிமேடு காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்து போட உத்தரவிடப்பட்டது. இதனால், கடப்பாக்கத்தில் இருந்து தினசரி காலை காசிமேடு காவல் நிலையம் வந்து, கையெழுத்து போட்டுவிட்டு, மீண்டும் கடப்பாக்கம் வந்துவிடுவார். அதன்படி,  நேற்று  காசிமேடு காவல் நிலையம் செல்வதற்காக, கடப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில்  அதிகாலை 5 மணிக்கு  பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த காரில் இருந்து அரிவாளுடன் இறங்கிய மர்ம நபர்கள், அட்டு ரமேஷை சுற்றி வளைத்தனர்.

சுதாரித்துக்கொண்ட அவர், அங்கிருந்து தப்பியோட முயன்றார். அவரை விரட்டி சென்ற மர்ம நபர்கள், சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில், சம்பவ இடத்திலேயே ரத்த  வெள்ளத்தில் பரிதாபமாக அவர் இறந்தார். இதையடுத்து, மர்ம நபர்கள் காரில் ஏறி தப்பினர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இதுபற்றி சூனாம்பேடு காவல் நிலையத்துக்கு தெரிவித்தனர்.  அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து  வந்து, அட்டு ரமேஷின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடந்ததா அல்லது வேறு  ஏதேனும் காரணமா என்ற கோணங்களில் விசாரித்து  வருகின்றனர். தப்பிய மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: