×

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திய 3 கிலோ தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது

சென்னை: துபாயில் இருந்து 2 விமானங்களில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக திருச்சி, ராமநாதபுரத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். வெளி நாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள், நள்ளிரவில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து தீவிரமாக கண்காணித்தனர். குறிப்பாக, சுங்க சோதனை முடிந்து வெளியே வந்த பயணிகளை நிறுத்தி, மீண்டும் சோதனையிட்டனர்.

அப்போது, துபாய், சார்ஜா, அபுதாபி நாடுகளில் இருந்து வந்த 3 விமான பயணிகளை சோதனையிட்டனர். நேற்று அதிகாலை துபாயில் இருந்து சென்னை வந்த பிளை துபாய் ஏர்லைன்ஸ், எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஆகிய விமானங்களில் வந்த திருச்சியை சேர்ந்த சின்னராசு (38), ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது ஜூலாவுதீன் (35) ஆகியோர் மீது சந்தேகம் எழுந்ததால், அவர்களது உடமைகள் முழுவதையும் சோதனையிட்டனர்.  அப்போது, அவர்களது சூட்கேஸ்களில் ரகசிய அறைகள் வைத்து தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இருவரது சூட்கேஸ்களிலும் 30 தங்க கட்டிகள் இருந்தன. மொத்த எடை 3 கிலோ. அதன் சர்வதேச மதிப்பு 1.4 கோடி. தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த இருவரையும் கைது செய்தனர்.

மேலும் சந்தேகத்தில் நிறுத்தி வைத்திருந்த மற்ற பயணிகளை சோதனையிட்டதில், அவர்களில் ஒரு சிலரிடம் மட்டும் மிக குறைந்தளவில் தங்கம் இருந்தது. அவர்களின் அந்த தங்கத்திற்கு சுங்கத்தீர்வை வசூலித்து விட்டு அனுப்பினர்.  3 கிலோ தங்க கட்டிகளுடன் பிடிப்பட்ட கடத்தல் ஆசாமிகள் இருவரையும், தங்க கட்டிகளையும் மேல்நடவடிக்கைக்காக சென்னை விமான நிலைய சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர். பெரிய அளவில் தங்கம் சிக்காததால், இந்த வழக்கை சென்னை விமான நிலைய சுங்கத்துறையிடமே ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. மேலும், சுங்கத்துறை சோதனையை மீறி கடத்தல் ஆசாமிகள் வெளியே வந்தது எப்படி என விசாரணை நடக்கிறது.


Tags : Dubai ,Chennai , Chennai, gold, confiscated
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...