×

ஆரணியில் சிறுமி பலி எதிரொலி: ஓட்டல் உரிமம் அதிரடி ரத்து: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

ஆரணி: ஆரணி அடுத்த லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன்(40), அரிசி ஆலை தொழிலாளி. இவரது மனைவி பிரியதர்சினி(32).  இவர்களது மகன் சரண்(12), மகள் லோஷினி(10). கடந்த 8ம் தேதி ஆனந்தன் குடும்பத்துடன் ஆரணி காந்தி சாலையில் உள்ள அசைவ  ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு சென்றபோது, திடீரென  4 பேரும் வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இதில் லோஷினி ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 3 பேர் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில், நேற்று  மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் சிறுமி இறப்புக்கு காரணமான அசைவ ஓட்டலின் உணவு மாதிரிகளை சேகரித்து சேலத்தில் உள்ள அரசு ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, ஓட்டலை பூட்டி சீல் வைத்ததுடன் ஓட்டல் உரிமத்தை ரத்து செய்தனர். ஓட்டல் உரிமையாளர் அம்ஜித் பாஷா மற்றும் சமையல்காரர் முனியாண்டி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஆரணி டவுன் பகுதிகளில் நேற்று மட்டும் 12 அசைவ ஓட்டல்களில் ஆய்வு செய்ததில், காந்திசாலையில் உள்ள ஒரு ஓட்டலில் மட்டும் தரமற்ற இறைச்சி பிரிட்ஜில் பதப்படுத்தப்பட்டு வைத்திருந்ததை பறிமுதல் செய்து அழித்தனர்.

பரோட்டா சாப்பிட்டவர் திடீர் சாவு
திருவண்ணாமலை மாவட்டம் பவித்திரம் கிராமத்தை சேர்ந்தவர்  தாமோதரன்(45). திருவண்ணாமலையில் ஓட்டல் வைத்துள்ளார். நேற்று திருக்கோவிலூர் பகுதிக்கு வந்த அவர், ஒரு ஓட்டலில் பரோட்டா வாங்கிக் கொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு பேருந்து நிறுத்தும் இடத்தில் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து இறந்துள்ளார். திருக்கோவிலூர் போலீசார் வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Arani , Arani, little girl, killed
× RELATED 150 கிலோ மிளகாய் கொண்டு மகா...