×

அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில் குஜராத் முதல்வர் திடீர் ராஜினாமா: மேலிட அழுத்தம் காரணமா?: பாஜவில் நடக்கும் பதவி பறிப்புகளால் பரபரப்பு

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், முதல்வர் விஜய் ரூபானி நேற்று திடீரென பதவி விலகினார். அவரது பதவி விலகலுக்கான எந்த காரணமும் வெளியிடப்படவில்லை. மேலிட அழுத்தம் காரணமாக அவர் பதவி விலகியதாக கருதப்படுகிறது. பாஜ.வில் அடுத்தடுத்து நடக்கும் இதுபோன்ற பதவி பறிப்புகளால் பரபரப்பு நிலவுகிறது. குஜராத் மாநிலத்தில் விஜய் ரூபானி (65) தலைமையிலான பாஜ அரசு, கொரோனா 2வது அலையை எதிர்கொள்வதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. மாநிலத்தின் பல மருத்துவமனைகளில் இடமின்றி நோயாளிகளுக்கு மைல் நீளத்திற்கு நிற்கும் ஆம்புலன்சுகளிலேயே சிகிச்சை அளிக்கப்பட்ட புகைப்படங்களால் சர்வதேச அளவில் இந்தியா விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில், முதல்வர் விஜய் ரூபானி நேற்று திடீரென பதவி விலகினார். ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்தை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்தார். ரூபானியின் திடீரென பதவி விலகலுக்கு காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், கட்சி மேலிடத்தின் ்அழுத்தம் காரணமாக அவர் பதவி விலகியதாக கருதப்படுகிறது.

ராஜினாமா கொடுத்த பிறகு, ஆளுநர் மாளிகைக்கு வெளியே பேட்டி அளித்த ரூபானி, ‘‘ஐந்து ஆண்டுகள் மாநில வளர்ச்சிக்காக எனது பங்களிப்பை வழங்கினேன். நேரத்திற்கு ஏற்றபடி பொறுப்புகளை மாற்றுவது பாஜ.வில் வழக்கமானது. அடுத்ததாக கட்சி எனக்கு வழங்கக் கூடிய எந்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். என்னைப் போன்ற சாதாரண தொண்டனுக்கு முதல்வர் பதவி கொடுத்து வாய்ப்பு அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கும், கட்சிக்கும் இடையே எந்த கசப்பும் இல்லை,’’ என்றார். கடந்த 2016 ஆகஸ்ட்டில், குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடப்பதற்கு ஓராண்டு இருந்த நிலையில், அப்போதைய முதல்வர் ஆனந்தி பென் படேல் இதேபோல் திடீரென பதவி விலகினார். அப்போது, அவருக்கு 75 வயதாகி விட்டது என காரணம் கூறப்பட்டது. அதன் பிறகு, விஜய் ரூபானி புதிய முதல்வராக பொறுப்பேற்றார்.

கடந்த 2017, டிசம்பரில் நடந்த தேர்தலில் ரூபானி தலைமையிலான பாஜ வெற்றி பெற்று, முதல்வராக அவர் தொடர்ந்தார். அவர் 5 ஆண்டுகள் ஆட்சி செய்த நிலையில், அடுத்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், ரூபானி பதவி விலகி உள்ளார். சமீப காலமாகவே, பாஜ.வில் பெரிய பதவிகளில் அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில், கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா பதவி விலகி பசவராஜ் பொம்மை புதிய முதல்வரானார். உத்தரகாண்டில், திரிவேந்திர சிங் ராவத் பதவி விலகி, தீரத் சிங் ராவத் பதவியேற்றார். பின்னர் அவரும் மாற்றப்பட்டு புஷ்கர் சிங் தாமி தற்போது முதல்வராக உள்ளார். இதே போல், ஒன்றிய அமைச்சரவையில் மூத்த அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் நீக்கப்பட்டனர். இந்த வரிசையில் தற்போது விஜய் ரூபானியும் இணைந்துள்ளார்.

மண்டவியாவுக்கு வாய்ப்பு
விஜய் ரூபானி பதவி விலகியதைத் தொடர்ந்து, குஜராத்தின் அடுத்த முதல்வர் யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்போட்டியில், தற்போதைய துணை முதல்வர் நிதின் படேல், மாநில வேளாண் அமைச்சர் பல்டு, ஒன்றிய அமைச்சர்கள் மன்சுக் மண்டவியா, புருஷோத்தம் ரூபாலா ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன.

படிதார் சமூகத்துக்கு பதவியா?
தேர்தல் நெருங்கும் நிலையில், அதிக வாக்காளர்களை கொண்ட படிதார் சமூகத்தின் விருப்பத்தை நிறைவேற்ற பாஜ காய் நகர்த்துவதாக கூறப்படுகிறது. ரூபானியின் ஜெயின் சமூகத்தினர் வெறும் 2 சதவீதத்தினர் மட்டுமே உள்ளனர். ஏற்கனவே படிதார் சமூகத்தை சேர்ந்த தலைவருக்கே அடுத்த முதல்வர் பதவி தரப்பட வேண்டுமென பலதரப்பிலும் வலியுறுத்தப்படுகிறது. எனவே படிதார் சமூகத்தை சேர்ந்த ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டாவியா, துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.


Tags : Principal of ,Gujarat ,Paja , Gujarat Chief Minister , resign
× RELATED ரோட்ஷோவில் கூடிய கூட்டத்தால் நல்ல...