×

நாடு முழுவதும் நாளை 202 மையங்களில் நடக்கிறது: 16 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்..! செல்போன், முழுக்கை சட்டை, நகைகள், ஷூவுக்கு தடை

சென்னை: நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடக்கிறது. 202 மையங்களில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். எம்பிபிஎஸ்,  பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப்  படிப்புகளுக்கு ‘நீட்’ என்னும் நுழைவு தேர்வை ஆண்டுதோறும் மத்திய அரசு தேசிய தேர்வுகள் முகமை சார்பில் நடத்தி வருகிறது.  இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே முதல் வாரத்தில்  நடைபெறவிருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில்  நீட் தேர்வு நாளை (செப்டம்பர் 12ம் தேதி) நடைபெற உள்ளது. நீட் தேர்வு எழுத நாடு  முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 890 பேர் மட்டுமே  விண்ணப்பித்துள்ளனர்.

இது கடந்த ஆண்டைவிட சுமார் 10 ஆயிரம் பேர் குறைவு.  அவர்களில் தமிழில் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து இருப்பவர்கள் 19,867 பேர். இதையடுத்து தேர்வு மையங்கள் பட்டியல்,  நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை  வெளியிட்டது. இந்நிலையில் கிராமப்புற  மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவதாக கூறி, தமிழகம் நீட் தேர்வை தொடர்ந்து  எதிர்த்து வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு  ஆட்சிக்கு வந்தது முதல் நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக பல்வேறு  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில்  அமைக்கப்பட்ட ஆணையம், கல்வியாளர்கள், மாணவர்கள், மக்களிடம் கருத்துக்களை  கேட்டது. இதில் பெரும்பாலானவர்கள் நீட் தேர்வு ேவண்டாம் என்று கருத்து  தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பான அறிக்கை தமிழக அரசு சார்பில் ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்திடம் வழங்கப்பட்டது. எனினும் நீட் தேர்வு கட்டாயம்  நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. நாடு முழுவதும்  202 மையங்களில் நாளை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை பேனா, காகித  முறையில் நீட் தேர்வு நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு  நடைபெறும் நகரங்கள் 155ல் இருந்து 198ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில்  தேர்வு நடைபெறும் மையங்களின் எண்ணிக்கை 14 லிருந்து 18 ஆக  உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக செங்கல்பட்டு, விருதுநகர்,  திண்டுக்கல், திருப்பூரில் இந்தாண்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நீட்  தேர்வு எழுதும் மொழிகள் 11ல் இருந்து 13 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்  மொழியிலும் தேர்வு நடைபெற உள்ளது. நீட் தேர்வில் ஓஎம்ஆர் தாளை எப்படி  நிரப்ப வேண்டும் என்பது குறித்த விவரமும்  இணையதளத்தில் விளக்கமாக  கூறப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் தேர்வு மையத்துக்கு எப்போது, எவ்வாறு வர வேண்டும் என்பது பற்றி தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்,  மாணவ, மாணவிகள்  கையுறை, மாஸ்க், லூசான ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும்.

ஜீன்ஸ், சல்வார்,  நீளமான ஸ்கர்ட், டிரவுசர், டி சர்ட்ஸ், சர்ட் ஆகியவற்றை அணிந்து வரலாம்,  முழுக்கை சட்டை, பெரிய பட்டன் கொண்ட சட்டைகள், அடர் நிறம் கொண்ட ஆடைகளை  அணியக் கூடாது. கட்டாயம் ஷூ அணிந்து வரக் கூடாது. செருப்பு அணிந்து வரலாம்.  நகைகளை அணிந்து வரக் கூடாது. மதம் சார்ந்த நகைகளுக்கு விலக்கு  அளிக்கப்பட்டுள்ளது. தலையில் ஸ்கார்ப் மற்றும் தலைப்பாகை அணிந்து வரலாம்.  ஆனால், பரிசோதிக்கப்படுவார்கள். வாட்ச் எந்த காரணம் கொண்டும் அணிந்து வரக்  கூடாது. தண்ணீர் பாட்டில், ஹால் டிக்கெட் எடுத்து வர வேண்டும். அரசு  வெளியிட்டு இருக்கும் போட்டோ ஐடி கார்டு, பிடபுள்யூடி சான்றிதழ் கட்டாயம்  எடுத்து வரவேண்டும். பால் பாயின்ட் பென் தான் கொண்டு வரவேண்டும். செல்போன்,  புளூடூத், இதுபோன்ற தகவல்களை பரிமாறும் வேறு எந்த சாதனங்களையும் எடுத்து  வரக் கூடாது. தேர்வு மையங்களில் தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்பட்டு  இருக்காது.

பைகள், சிறுதீனிகள், புத்தகம், பிரின்ட் எடுக்கப்பட்ட  பேப்பர்கள், கொண்டு வரக்கூடாது. எந்தக் காரணம் கொண்டும் கைநாட்டு ஹால்  டிக்கெட்டில் வைத்து இருக்கக் கூடாது. தனியாக அமர வேண்டும் தேர்வு  மையங்களுக்குள் செல்வதற்கு முன்பாக உடல் வெப்பநிலை சரிபார்க்கப்படும். 99.4  டிகிரிக்கு மேல் இருந்தால், 20 நிமிடம் தனியாக அமர வைக்கப்படுவார்கள்.  அதன் பின்னரும் உடல் வெப்பநிலை குறையவில்லை என்றால் தனி அறையில் வைத்து  தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்கள் 12.30 மணிக்கு மையங்களுக்கு வந்து விட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் அந்தந்த  மாவட்டங்களில் ‘நீட்’ தேர்வு ஒருங்கிணைப்பு குழுக்கள் தேர்வு மையங்களில்  பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை  தடுக்கும் விதமாகவும், தேர்வு எழுத வருகை தரும் மாணவ, மாணவிகள் சமூக  இடைவெளியை கடைப்பிடித்து தேர்வு எழுதும் வகையிலும் ஒவ்வொரு மையத்திலும்  ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags : Tomorrow is happening in 202 centers across the country: 16 lakh students are writing the NEED exam ..! Ban on cell phone, t-shirt, jewelry, shoes
× RELATED மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை...