தெப்பக்காடு, டாப்சிலிப் முகாம்களில் விநாயகர் சதுர்த்தி விழா: யானைகள் மணியடித்து வழிபாடு

கூடலூர்: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு முகாமில் விநாயகர் சதுர்த்தியையொட்டி யானைகள் பூஜையுடன் விழா கொண்டாடப்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்ட யானைகள் கலந்து கொண்டன. முன்னதாக யானைகளை மாயாற்றில் குளிக்கச்செய்து அலங்காரங்கள் செய்து மாலை அணிவித்து வரிசையாக நிற்க வைக்கப்பட்டன. பின்னர் இங்குள்ள விநாயகர் கோயிலில் மசினி மற்றும் கிருஷ்ணா ஆகிய 2 யானைகள் கோயிலை சுற்றி மணியடித்து வந்து பூஜை செய்து வணங்கின. இதனைத்தொடர்ந்து அனைத்து யானைகளுக்கும் சிறப்பு உணவுகளான பழங்கள், கரும்பு, வெல்லம், பொங்கல் ஆகியவற்றுடன் வழக்கமான உணவுகள் வழங்கப்பட்டன.

முகாமில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். விநாயகர் சதுர்த்தி தினத்தில் முதுமலையில் யானைகள் முகாமில் யானைகள் மணியடித்து பூஜை செய்யும் நிகழ்ச்சி தங்களுக்கு புதிய அனுபவமாக இருந்ததாக இங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர். இதேபோல் தேவாலா நாடுகாணி பகுதிகளில் காட்டு யானைகளை விரட்டுவதற்காக கொண்டு செல்லப்பட்ட பொம்மன், சுஜய், சீனிவாஸ், வில்சன் ஆகிய 4 கும்கி யானைகள் தற்போது நாடுகாணி தாவரவியல் பூங்காவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த யானைகளுக்கு தாவரவியல் பூங்காவில் வைத்து வனத்துறையினர் விநாயகர் சதுர்த்தி பூஜை நடத்தினர்.

டாப்சிலிப் முகாம்

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் வனப்பகுதியில் கோழிகமுத்தி வளர்ப்பு யானைகள் முகாம் மற்றும் வரகளியாறு யானை பயிற்சி முகாம் உள்ளது. இங்கு 28 யானைகள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள யானைகள் கும்கி யானைகள் ஆகவும், சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் சவாரி யானைகளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி டாப்சிலிப்பில் உள்ள கோழிகமுத்தி முகாமிலுள்ள 22 யானைகளுக்கும், வரகளியாறு பயிற்சி முகாமில் உள்ள 6 யானைகளுக்கும் பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மேலும் வனத்துறை சார்பில் யானைகளுக்கு பிடித்த உணவான கரும்பு, சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டது. மேலும் கோழிகமுத்தி யானைகள் முகாமில் உள்ள, விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

Related Stories:

>