×

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி அமர்வு: பிரதமரின் அறிவிப்பிற்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வரவேற்பு

டெல்லி : இந்தியாவின் தலைசிறந்த கவிஞரும், தத்துவ ஞானியும், சுதந்திர போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியாரின் நூறாவது நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர்  நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இன்று, சுப்பிரமணிய பாரதியின் 100- வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி அமர்வை நிறுவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது”, என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சர்தார்தாம் பவன் மற்றும் சர்தார்தாம் 2-ஆவது பெண்கள் விடுதி பூமி பூஜையை இன்று காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்துப் பேசுகையில், மனித சமூகத்தின் ஒற்றுமை மற்றும் இந்தியாவின் ஒற்றுமையில் சுப்பிரமணிய பாரதியார் எப்போதும் சிறப்பு கவனம் செலுத்தியதாக பிரதமர் குறிப்பிட்டார். அவரது கொள்கைகள், இந்தியாவின் சிந்தனை மற்றும் தத்துவங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக விளங்குகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். சுவாமி விவேகானந்தரால் பெரிதும் ஈர்க்கப்பட்ட சுப்பிரமணிய பாரதியார், திரு அரவிந்தரால் எழுச்சி பெற்றதாக பிரதமர் தெரிவித்தார். காசியில் வசித்த போது தமது எண்ணங்களுக்கு பாரதியார் புதிய பாதையையும், புதிய ஆற்றலையும் அளித்ததாகவும் அவர் கூறினார்.

பழமைவாய்ந்த காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி அமர்வு நிறுவப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணை அமைச்சர் திரு எல். முருகன் வரவேற்றுள்ளார். சுதந்திரத்திற்கு வித்திட்ட மிகப்பெரிய மகாகவியாக, தமது எழுத்துக்கள், பாடல்களின் வாயிலாக மக்களிடத்தில் உத்வேகத்தை ஏற்படுத்திய பாரதியாரைப் போற்றும் வகையில் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

“சுப்பிரமணிய பாரதியின் 100-வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை நிறுவுவதாக அறிவித்த பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றிகள்!!!”, என்று கூறியுள்ளார்..

Tags : Subramanian Bharati Session ,Hindu University of Panaras ,PM ,Murugan , நரேந்திர மோடி
× RELATED ஐதராபாத்தில் பேருந்து சேவை குறைப்பு!!