பல ஆண்டுகளாக மாசடைந்துள்ள பக்கிங்காம் கால்வாயை மறுசீரமைப்பு செய்ய திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்: பொதுப்பணி துறை அதிகாரி தகவல்.!

சென்னை: பல ஆண்டுகளாக மாசடைந்துள்ள பக்கிங்ஹாம் கால்வாயை மறுசீரமைப்பு செய்ய திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளர். ஆங்கிலேயர் ஆட்சியின் போது சென்னையின் முக்கிய நீர்வழித்தடமாக விளங்கிய பக்கிங்ஹாம் கால்வாய் ஆந்திராவில் தொடங்கி விழுப்புரம் வரை என 420 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. ஆங்கிலேயர்கள் தங்கள் பயண நேரத்தை எளிதாக்கவும், ஆந்திராவில் இருந்து சரக்குகள் ஏற்றி வரவும் இந்த கால்வாயை செயற்கையாக தோண்டினர். சிறப்பான நீர்வழித்தடமாக இருந்த பக்கிங்ஹாங் கால்வாயில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட படகுகள் பயன்பாட்டில் இருந்தது. 1806ம் ஆண்டு சென்னை எண்ணூரில் இருந்து பழவேற்காடு வரை தோண்டப்பட்டு, பின்னர் சென்னையில் பஞ்சம் ஏற்பட்டபோது மக்களுக்கு வேலை கொடுக்கும் பொருட்டு இந்த கால்வாய் மேலும் நீட்டிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் 170 கி.மீ நீளம் கொண்ட இந்த கால்வாய் சென்னையில் 48 கி.மீ ஓடுகிறது. ஆங்கிலேயரால் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய், அவர்கள் வெளியேறிய பிறகு மோசமான விளைகளை சந்திக்க தொடங்கியது. கழிவுநீரை கால்வாயில் கலக்க விடுவதாலும், கரையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்ததாலும் கால்வாயின் அகலம் குறைந்து நீர்நிலை முற்றிலுமாக மாசடைந்து விட்டது. கடந்த காலங்களில் இந்த கால்வாயினை மறுசீரமைப்பு செய்வதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அது கைவிடப்பட்டு வந்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து பக்கிங்ஹாம் கால்வாயினை மறுசீரமைப்பு செய்ய வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 50 வருடங்களாக கழிவுநீர் மாசால், குறிப்பாக சென்னையில் இந்த கால்வாய் சீரழிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பக்கிங்ஹாம் கால்வாயின் எல்லையை வரையறுக்கவும், 48 கி.மீ நீளம் கொண்ட கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை கையகப்படுத்தவும் சென்னை ஆட்சியருக்கு தமிழ்நாடு பொதுப் பணித்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், கால்வாயை சுற்றுசூழல் மறுசீரமைப்பை மேற்கொள்ளவும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பொதுப்பணி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சேப்பாக்கம் முதல் திருவான்மியூர் வரை உள்ள ரயில் நிலையங்களை ஒட்டிய நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு அகலம் குறைத்துள்ளதால் ரயில் நிலையங்களில் உயர்வான கட்டுமானத்தை ஏற்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்பு காரணமாக கடந்த 50 வருடங்களில் கழிவுநீரால் நீர்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கால்வாயை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சி சார்பில் கால்வாயின் மேற்கு பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. நடைபாதைகள், பூங்காக்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதிகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கால்வாயின் எல்லையை வரையறுக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டிஸ் அனுப்பிய அடுத்த 15 நாட்களில் எல்லை நிர்ணய வேலையை தொடங்க உள்ளோம். பின்னர் தான் ஆக்கிரமிக்கப்பட்ட கால்வாய் கரைகளை அடையாளம் காண முடியும். இந்த வேலைகள் முடிந்தவுடன் கால்வாயின் நீர்நிலையை சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மேற்கொள்வதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்’ என்றார்.

Related Stories:

>