×

விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்: மலை சாலைகளில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்

ஜோலார்பேட்டை: விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் நேற்று ஏலகிரி மலை பகுதியில் பல்வேறு இடங்களை கண்டுகளித்து மகிழ்ந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. கொரோனா தொற்று காரணமாக சுற்றுலாத்தலம் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் 29ம் தேதி முதல் சுற்றுலாத்தலம் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இங்குள்ள படகுத்துறை, சிறுவர் பூங்கா, இயற்கை பூங்கா, முருகன் கோயில், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, நிலாவூர் கதவ நாச்சி அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து தங்கி கண்டு ரசித்து செல்கின்றனர். நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து வருகின்ற நிலையில் மேலும் ஏலகிரி மலை சுற்றுலா தலத்தை மேம்படுத்துவதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அதன் அடிப்படையில் பள்ளக்கணியூர் பகுதியில் 100 ஏக்கர் பரப்பில் தாவரவியல் பூங்கா மற்றும் உள்ளூர் விளையாட்டு அரங்கம் உள்ளிட்டவைகள் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுமட்டுமல்லாமல் இங்குள்ள பல்வேறு இடங்கள் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் வரும் காலங்களில் சுற்றுலாத்தலம் பொலிவுடன் காட்சி அளிக்க உள்ளது. இந்நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலையில் குவிந்தனர்.

மேலும் மலைச்சாலைகளில் குடும்பத்தினருடன் வரும் சுற்றுலா பயணிகள் பார்வை மையம் பகுதிகளில் ஆங்காங்கே நின்று தங்களது குடும்பத்துடன் செல்பி எடுத்து மலை உச்சியிலிருந்து கீழ்ப்பகுதியை கண்டு ரசித்து மகிழ்ந்தனர். இதனை அடுத்து படகுத்துறை பூங்காவில் படகு சவாரி செய்தும் சிறுவர் பூங்காவில் தங்களது குழந்தைகளை மகிழ வைக்கும் பல்வேறு மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் பழங்கள், சாக்லேட் வகைகள், உணவு பொருட்கள் உள்ளிட்டவைகளை வாங்கியும் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

மேலும் நான்கு மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாத்தலம் திறக்கப்பட்டுள்ள நிலையில் இங்குள்ள ஹோட்டல் உரிமையாளர்கள், கடை வியாபாரிகள், வியாபார தொழிலாளர்கள் விவசாயிகள் உள்ளிட்டோர் தொழில் காரணமாக தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் விதமாக மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தனியார் பொழுதுபோக்கு கூடங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் தனியார் பொழுதுபோக்கு கூடங்களை ஆர்வத்துடனும் கண்டு ரசித்து வருகின்றனர்.

Tags : Yelagiri Hills ,Ganesha Chaturthi , Tourists flock to Yelagiri Hill for Ganesha Chaturthi Holiday: Standing on the Mountain Roads and Enjoying Selby
× RELATED மைக்ரோசாப்ட் தலைமையகத்தில் விநாயகர்...