முதுமலை முகாமில் யானைகள் பூஜையுடன் விநாயகர் சதுர்த்தி விழா

கூடலூர்: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு முகாமில் விநாயகர் சதுர்த்தியையொட்டி யானைகள் பூஜையுடன் விழா கொண்டாடப்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்ட யானைகள் கலந்து கொண்டன. முன்னதாக யானைகளை மாயாற்றில் குளிக்கச்செய்து அலங்காரங்கள் செய்து மாலை அணிவித்து வரிசையாக நிற்க வைக்கப்பட்டன. பின்னர் இங்குள்ள விநாயகர் கோயிலில் மசினி மற்றும் கிருஷ்ணா ஆகிய 2 யானைகள் கோயிலை சுற்றி மணியடித்து வந்து பூஜை செய்து வணங்கின.

 

இதனைத்தொடர்ந்து அனைத்து யானைகளுக்கும் சிறப்பு உணவுகளான பழங்கள், கரும்பு, வெல்லம், பொங்கல் ஆகியவற்றுடன் வழக்கமான உணவுகள் வழங்கப்பட்டன. முகாமில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். விநாயகர் சதுர்த்தி தினத்தில் முதுமலையில் யானைகள் முகாமில் யானைகள் மணியடித்து பூஜை செய்யும் நிகழ்ச்சி தங்களுக்கு புதிய அனுபவமாக இருந்ததாக இங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் வனத்துறை ஊழியர்கள் பணியாளர்கள் மற்றும் யானைப் பாகன்கள் உதவியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதேபோல் தேவாலா நாடுகாணி பகுதிகளில் காட்டு யானைகளை விரட்டுவதற்காக கொண்டு செல்லப்பட்ட பொம்மன், சுஜய், சீனிவாஸ், வில்சன் ஆகியய 4 கும்கி யானைகள் தற்போது நாடுகாணி தாவரவியல் பூங்காவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த யானைகளுக்கு தாவரவியல் பூங்காவில் வைத்து வனத்துறையினர் விநாயகர் சதுர்த்தி பூஜை நடத்தினர்.

Related Stories:

More