ஒன்றிய அரசு உடல்நலம், கல்வித்துறையில் போதிய கவனம் செலுத்தவில்லை : முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் சாடல்!!

மும்பை : மக்கள் தொகை அதிகம் உள்ள நாடான இந்தியாவை ஒன்றிய அரசு முழுமையாக நிர்வகிப்பது கடினம் என்பதால் மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் வலியுறுத்தி உள்ளார். பிரபல இணையதளம் சார்பில் நடைபெற்ற பொருளாதார கருத்தரங்கில் பேசிய ரகுராம் ராஜன், இந்தியா பெரிய நாடு என்பதால் ஒன்றிய அரசே அனைத்து மாநிலங்களையும் நிர்வகிப்பது கடினம் என்று கூறினார். நிர்வாகத்தை எளிமையாக்கவும் மக்களுக்கு அதிகாரம் அளிக்கவும், மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒன்றிய அரசிடம் அதிகாரம் இருக்க வேண்டும் என்றாலும் மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கினால் தான், ஜனநாயகம் வலுப்பெறும் என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். பொது மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டால் தான் மக்களின் தேவைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.பொதுத் துறை சொத்துக்களை குத்தகைக்கு விடும் ஒன்றிய அரசின் திட்டத்தை கடுமையாக விமர்சித்த அவர், பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிய அரசுக்கு தனியாருக்கு தாரைவார்க்க கூடாது என்றார்.

பொதுவான கட்டுப்பாடுகள் இல்லாமல் பொதுத் துறை நிறுவனங்களை தனியார் துறையிடம் ஒப்படைத்தால் ஏகபோக உரிமை காரணமாக அவை பொதுமக்களிடம் இருந்து பணத்தை பிழிந்தெடுக்கும் முயற்சி மேற்கொள்ளும் என்று அவர் எச்சரித்து இருக்கிறார்.தனியார்மயமாக்கலுக்கு பதிலாக நிர்வாகம் மற்றும் விதிகளை மேம்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரகுராம் ராஜன் கேட்டுக் கொண்டார். ஒன்றிய அரசு உடல்நலம் மற்றும் கல்வி ஆகியவற்றில் போதிய கவனம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள ரகுராம் ராஜன், செலவுகளை குறைக்கவும் அரசு இயந்திரம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

Related Stories: