பாளையங்கால்வாய் தடுப்பு சுவர்களில் உடைப்பு: கோட்டூர் சாலையில் வாகன ஓட்டிகள் அச்சம்

நெல்லை: பாளை கோட்டூர் சாலையில் பாளயங்கால்வாய் தடுப்பு சுவர்களில் ஏற்பட்டுள்ள உடைப்பு காரணமாக வாகன ஓட்டிகள் அச்சத்தோடு அப்பகுதியை கடந்து செல்கின்றனர்.

நெல்லை மாநகர பகுதிக்குள் பல்வேறு இடங்களில் பாளையங்கால்வாயின் தடுப்பு சுவர்கள் உடைந்து காணப்படுகின்றன. நெல்லை மாநகராட்சி 10வது வார்டு பாளை- கோட்டூர் சாலையை ஒட்டி பாளையங்கால்வாய் செல்கிறது. திருஞான சம்பந்தர் தெரு வழியாக செல்லும் பாளையங்கால்வாயில் சில இடங்களில் தடுப்பு சுவர் உடைந்து காணப்படுகிறது.

எனவே இப்பகுதியில் செல்லும் வாகனங்கள்  கால்வாயில் தவறி விழ வாய்ப்புகள் உள்ளது. மேலும் இச்சாலையில் வாகனங்கள் ஒன்றையொன்று முந்தி செல்லாத அளவுக்கு குறுகியதாக காணப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் கூறுகையில், ‘‘பாளை கோட்டூர் சாலையில் பாளையங்கால்வாயின் தடுப்பு சுவர்கள் ஆங்காங்கே உடைந்து காணப்படுகின்றன. அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.

இப்பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்ட கல்பாலமும் சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே இச்சாலையின் கரையோரபகுதிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இச்சாலையை சீர் செய்வதற்கு மாநகராட்சியும், பாளையங்கால்வாய் பாலத்தை அமைக்க பொதுப்பணித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

>