×

நெருங்கும் தீபாவளி பண்டிகை: பட்டாசு உற்பத்தி பணிகள் சிவகாசியில் தீவிரம்

சிவகாசி: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 56நாட்களே உள்ள நிலையில் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி விறுவிறுப்படைந்துள்ளது. சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நாட்டின் மொத்த பட்டாசு தேவையில் சுமார் 90 சதவீத பட்டாசு இங்கு உற்பத்தியாகிறது. தீபாவளி நெருங்குவதையொட்டி சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு உற்பத்தி விறு, விறுப்படைந்துள்ளது.

பூச்சட்டி, தரைச்சக்கரம், சரவெடி போன்ற வழக்கமான பட்டாசுகளை காட்டிலும் இளவயதினர் ஃபேன்ட்ஸி ரக பட்டாசுகளை அதிக அளவில் விரும்புகிறார்கள் என்று பட்டாசு தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பட்டாசு உற்பத்தியாளர் பொன்குமார் கூறியதாவது: கொரேனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ராஜஸ்தான், ஒடிசா, ெடல்லி உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடைவிதிக்கப்பட்டதால் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவில் பட்டாசு தேக்கம் அடைந்தது. வெளிமாநிலங்களில் பட்டாசுகள் தேக்கமடைந்ததால் சில வியாபாரிகள் இந்த ஆண்டு விற்பனைக்கு ஸ்டாக் வைத்துள்ளனர். சில வியாபாரிகள் திருப்பி அனுப்பி வைத்துவிட்டனர்.

கடந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி பாதிப்பு, விற்பனை பாதிப்பு போன்ற காரணங்களால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு ஸ்டாக் காரணமாக சிவகாசியில் காலதாமதமாகவே பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டன. இதன் காரணமாக, வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடிந்தது. நடப்பாண்டு 40 சதவிகித உற்பத்தி மட்டுமே நடைபெறுகின்றது. பட்டாசு மூலப்பொருட்கள் விலையேற்றம் காரணமாக பட்டாசு விலையையும் உயர்த்த வேண்டியுள்ளது.

ஆனால், கடந்த ஆண்டு வியாபாரிகளிடம் உள்ள ஸ்டாக் காரணமாக மூலப்பொருட்கள் விலை ஏற்றத்திற்கு ஏற்ப பட்டாசு விலையை ஏற்ற முடியவில்லை. இதனால் ஒவ்வொரு நிறுவனத்திற்கு ஏற்ப 10 முதல் 20 சதவிகித விலையேற்றம் இருக்கும். லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நலன் கருதி தீபாவளி அன்று நாடு முழுவதிலும் கட்டுப்பாடுகளின்றி பட்டாசு வெடிக்க அனுமதி வழங்க வேண்டும். பட்டாசுத் தொழிலை காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.



Tags : Approaching Deepavali Festival ,Sivakasi , Approaching Deepavali Festival: Fireworks production intensifies in Sivakasi
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து