கொரோனா பரிசோதனை மேற்கொள்ள 430 உபகரணங்களுக்கு ஒப்புதல் புதிதாக 4 நிறுவனத்துக்கு அனுமதி

சென்னை: பொதுவாக, சளி  மாதிரிகள் மூலம் உடலில் வைரஸ் மரபணு உள்ளதா என்பதை  ஆர்டிபிசிஆர் ஆய்வின்  மூலம் அறியலாம். அதேவேளையில், வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் உடலில்  உருவாகியிருக்கிறதா என்பதை ரத்த மாதிரிகளைக்  கொண்டுதான் அறிந்து கொள்ள இயலும். ரேபிட் கிட் வாயிலாகவும்,  எலிசா, சிஎல்ஐஏ போன்ற பரிசோதனை மூலமாகவும் இது கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  நாடு முழுவதும் அத்தகைய துரித  பரிசோதனை மற்றும் பிசிஆர் உபகரணங்களை  உற்பத்தி செய்யவும், விற்பனை  செய்யவும் பல்வேறு நிறுவனங்கள் மருந்து தரக்  கட்டுபாட்டு வாரியத்திடம்  விண்ணப்பித்தன.

அதில் இந்தியா மட்டுமல்லாது சீனா,  தென் கொரியா, பிரிட்டன்,  பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த  நிறுவனங்களின் உபகரணங்களை இங்கு  பயன்படுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டது.  அவற்றை தரப்பரிசோதனை செய்த மத்திய  மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் 217  துரிதப் பரிசோதனை உபகரணங்கள், 213 பிசிஆர் உபகரணங்கள் என மொத்தம் 430  உபகரணங்களை பயன்படுத்த  அனுமதியளித்துள்ளது. கொரோனா தொற்றைக் கண்டறிவதற்கான  பரிசோதனைகளை மேற்கொள்ள மேலும் 4 நிறுவனங்களின் உபகரணங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  மற்றவை பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.

Related Stories:

More
>