தமிழகம் முழுவதும் சதுர்த்தி விழா கோலாகலம் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து மக்கள் வழிபாடு

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியான நேற்று பொதுமக்கள் தங்களது வீடுகளில் சிறிய வகையிலான விநாயகர் சிலையை வைத்து அவற்றிற்கு அவல், பொரி, பழங்கள் படைத்து வழிபட்டனர்.  அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் பெரிய கோயில்கள் மூடப்பட்டிருந்தன. இதனால், பொதுமக்கள் கோயில் வாயிலில் நின்று வழிபாடு செய்தனர். சிறிய கோயில்கள் வழங்கம் போல் திறந்திருந்தது. அந்த கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பல இடங்களில் பக்தர்களுக்கு சுண்டல், சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், சாம்பார் சாதம், வெண் பொங்கல், கொழுக்கட்டை உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பல இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதற்கிடையே பூஜை பொருட்களை வாங்க நேற்று காலையும் கோயம்பேடு, மயிலாப்பூர், புரசைவாக்கம், தி.நகர், திருவான்மியூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சாலைகளிலேயே பொரி, ஆப்பிள், ஆரஞ்ச், சாத்துக்குடி, மக்காச்சோளம், கொய்யா பழம், கரும்பு, தென்னங்கீற்று ஆகியவை விற்பனையும் களைகட்டியிருந்தது. பொருட்களை வாங்க வந்தவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்று அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அறிவுரை வழங்கினர்.

களிமண்ணால் ஆன சிறிய விநாயகர் சிலை விற்பனையும் சூடுபிடித்தது. மேலும் கலர்கலராக வித்தியாசமான முறையில் வைக்கப்பட்டிருந்த சிறிய சிலைகள் பார்ப்போரை வெகுவாக கவர்ந்தது. அதனையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். அவற்றை வீடுகளில் வைத்து வழிபாடுகள் நடத்தினர். தொடர்ந்து பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்ட சிறிய சிலைகள் வழிபாட்டுக்கு பின்னர், தனிநபராக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளது. அதே  நேரத்தில் தடையை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதை கண்காணிக்கும்  வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. சென்னையில் மட்டும்  கண்காணிப்பு பணியில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தது.

Related Stories:

>