×

விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து 2 நாட்களில் 1.5 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

சென்னை: விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து கடந்த இரண்டு நாட்களில் 1.50 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறபட்டுச்சென்றனர். இதனால் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் சுபமுகூர்த்தம். தொடர்ந்து 3 நாட்கள் அரசின் தொடர் விடுமுறை. அதனால் பலரும் நேற்று முன்தினம் முதலே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கினர். இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று காலையிலும் பலர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். குறிப்பாக திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், நாகை, சேலம் போன்ற இடங்களுக்கு மக்கள் அதிக அளவில் பயணித்தனர்.

தொடர் விடுமுறையால் அதிகப்படியான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் போக்குவரத்து துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. வழக்கமாக 2,600க்கும் மேற்பட்ட பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பிற இடங்களுக்கு இயக்கப்படும். கூடுதலாக 500க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் சொந்த ஊர்களுக்கு சென்றனர். குறிப்பாக சென்னையில் இருந்து மட்டும் 1.50 லட்சம் பேர் பல்வேறு இடங்களுக்கு சென்றதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சேலம், கும்பகோணம், விழுப்புரம், கோவை போன்ற பிற போக்குவரத்து கழகங்களின் சார்பிலும் கூடுதல் பஸ்கள் இயக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி சம்பந்தப்பட்ட இடங்களில் இருந்து அண்டை மாவட்டங்களுக்கும், சென்னைக்கும் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. சொந்த ஊரில் விழாவை முடித்து விட்டு எளிதாக சென்னைக்கு திரும்பும் வகையில் பிற மாவட்டங்களில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. இந்த சிறப்பு பஸ்கள் நாளை மாலை முதல் சென்னைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு வரும். இதேபோல் தெற்கு ரயில்வே சார்பில் ரயில்களும் இயக்கப்பட்டன. அதன் மூலமாக பயணிகள் பலரும் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால் சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேலும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் கோயம்பேடு பஸ் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் போன்ற இடங்களுக்கு ஒரேநேரத்தில் படையெடுத்தனர். இதனால் மாநகர பஸ்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் கார், பைக் போன்ற வாகனங்களிலும் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால் சென்னையின் புறநகர் பகுதிகளான வண்டலூர், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த கூடாது என அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1400 ஆம்னி பஸ்கள் இயக்கம்
அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் கூறுகையில், ‘சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 800 ஆம்னி பஸ்கள் இயக்கப்படும். தொடர் விடுமுறை காரணமாக பயணிகளின் எண்ணிக்ைக அதிகமாக இருந்தது. இதையடுத்து 600 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. இதேபோல் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், சென்னை திரும்புவதற்கு வசதியாக கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.

Tags : Vinayakar Churdhi Vacation ,Chennai , Ganesha Chaturthi, Holiday, Home Travel
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...