×

ஆரணியில் பரபரப்பு ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்ட சிறுமி பலி: வாந்தி, மயக்கத்துடன் 21 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் லட்சுமி நகரை சேர்ந்தவர் ஆனந்தன்(40). அரிசி ஆலையில் கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரியதர்ஷனி(32). இவர்களது மகன் சரண்(12). மகள் லோஷினி(10), தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 8ம் தேதி ஆனந்தன் தனது குடும்பத்துடன் ஆரணி காந்தி சாலையில் உள்ள ஒரு அசைவ ஓட்டலில் சாப்பிட்டுள்ளார். பின்னர், அன்று இரவு ஆனந்தன் உள்ளிட்ட 4 பேருக்கும் திடீரென வயிற்றுவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவர்கள் 4 பேரையும் மீட்டு ஆரணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மதியம் 2 மணியளவில் சிறுமி லோஷினிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். எனவே, அந்த சிறுமியை மட்டும் மேல்சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 3 பேரையும் வேலூரில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், ஆரணி அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஆரணி ஆர்டிஓ கவிதா,  டிஎஸ்பி கோட்டீஸ்வரன், தாசில்தார் சுபாஷ் சந்தர் மற்றும் டவுன் போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, கடந்த 8ம் தேதி ஆரணி ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்டவர்களில் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 21 நபர்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு வேலூர், ஆரணி, ெசன்னை, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதும், 50க்கும் மேற்பட்டவர்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது.  இந்நிலையில், ஓட்டல் உரிமையாளர் ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த அம்ஜித்பாஷா(32), சமையல்காரர் முனியாண்டி ஆகிய 2 பேரையும் நேற்று ஆரணி டவுன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், திருவண்ணாமலை மாவட்ட பாதுகாப்பு நியமன அலுவலர் உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் சேகர் தலைமையிலான அதிகாரிகள், ஓட்டலில் உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக சேலத்திற்கு அனுப்பி வைத்தனர்.  சம்பந்தப்பட்ட 2 ஓட்டல்களுக்கும் ஆர்டிஓ கவிதா தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Tags : aranam ,dissemination , Arani, hotel food, little girl killed, hospital
× RELATED 2-ம் கட்ட நகரங்களில் அதிகரிக்கும்...