×

ஓய்வு நீதிபதி தலைமையில் போலீஸ் கமிஷன் போலீசாருக்கு 8 மணி நேர பணி சுழற்சி முறையில் வழங்க வேண்டும்

* 10 சதவீதம் கூடுதல் ஊதிய உயர்வு
* ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை:  ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் போலீஸ் கமிஷன் அமைக்கவும், சுழற்சி முறையில் 8 மணி நேர பணி மற்றும் போலீசாரின் ஊதியத்தை 10 சதவீதம் உயர்த்தியும் வழங்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.  கரூரை சேர்ந்த ஓய்வு பெற்ற காவலர் மாசிலாமணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக காவல் துறையில் பணி புரிபவர்கள் மழை, வெள்ளம், வெயில், போன்ற அனைத்து காலங்களிலும் 24 மணி நேரமும் பணியாற்றுகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 1,000 பேருக்கு 2 பேர் என்ற விகிதத்தில் மட்டுமே காவல் துறையினர் உள்ளனர்.  

போலீஸ்காரர்களுக்கு ரூ.18 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. மிகக்குறைந்த ஊதியமானது, அவர்களுக்கு வாழ்க்கை நடத்துவதற்கு போதிய அளவில் இல்லாமல் உள்ளது. எனவே 24 மணி நேரமும் பணியில் ஈடுபடும் தமிழக போலீசாரின் ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன் (ஓய்வு), பி.புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: காவல்துறையில் பணியாற்றுவோர் மன அழுத்தம், அதிக வேலைப்பளு உள்ளிட்ட காரணங்களால் 2011ம் ஆண்டில் 31 பேர், 2020ம் ஆண்டில் 25 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

அவர்களது உடல்நலத்தை உரிய முறையில் கவனிக்காத காரணத்தால் 2011ல் 217 பேர், 2020ல் 200 பேர் இறந்துள்ளனர். 16 சதவீதம் அளவிற்கு காவல்துறையில் காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளன. சுமார் 16 ஆயிரம் பேருக்கு எஸ்எஸ்ஐ பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ளது. காவல்துறையினர் கடுமையான வேலை காரணமாக 24 மணிநேரமும் பணியாற்றும் சூழல் உள்ளது. 563 பேருக்கு ஒரு காவலர் என்ற விகிதமே உள்ளது. இந்த விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதேபோல் சட்டம், ஒழுங்கு பிரச்னை, குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பணியின்போது ஏற்படும் பிரச்னைகளால் கொல்லப்படும் காவல்துறையினருக்கு ரூ.15 லட்சம், பணியாற்ற முடியாத சூழல் ஏற்படுவோருக்கு ரூ.8 லட்சமும் வழங்கப்படுகிறது.

உயிரிழப்புக்கு குறைந்தபட்சம் ரூ.25 லட்சம், முழு உடல் பாதிக்கப்படுவோருக்கு ரூ.15 லட்சம் வழங்கப்பட வேண்டும். ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில், காவல்துறை ஆணையம் அமைக்க வேண்டும். இதில் உளவியல் துறை, மனநல ஆலோசகர், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள், பணியில் உள்ள காவலர்கள் இடம்பெற வேண்டும்.  2019ம் ஆண்டில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி, காவல்துறை அதிகாரிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட காவல்துறை ஆணையம் போதுமானது அல்ல. அதிக வேலைப்பளு உள்ளது.

எனவே ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர்களைக் கொண்ட காவல்துறை ஆணையம் அமைப்பது அவசியம். தற்போதைய நவீன சைபர் குற்றங்கள் மற்றும் இதர குற்றங்களின் தன்மைக்கேற்ப காவல்துறை நவீனமயமாக்கல் வேண்டியது அவசியம். இதற்கேற்ப பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை காவல்துறையில் நியமிக்க வேண்டும். முக்கியமாக, இவர்களுக்கு இதர அரசுத்துறையினரை விட கூடுதலாக 10 சதவீதம் ஊதியம் வழங்க வேண்டும், காவல் துறையினரின் பணியை இதர அரசு துறையினரின் பணிகளோடு ஒப்பிட முடியாது.

காவல்துறையினரின் பணி நேரத்தை 8 மணி நேரம் என நிர்ணயித்து மூன்று முறை சுழற்சி முறையில் பணி வழங்கப்பட வேண்டும். இதுபோன்ற குறைகளை சரி செய்யும் போது காவல் துறையில் நல்ல காவலர்களை எதிர்பார்க்க முடியும்.  இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Tags : Police Commission , Retired Judge, Police Commission, 8 hours duty
× RELATED போலீசார், துணை ராணுவத்தினரின் நாடாளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி