×

காவல் துறை பின்புலம் கொண்ட புதிய ஆளுநரை ஜனநாயகப் படுகொலை நடத்த ஆயுதமாக பயன்படுத்த முயற்சிக்க கூடாது: ஒன்றிய அரசுக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர்  கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு நியமித்துள்ளது.  முழுக்க, முழுக்க காவல் துறை பின்புலம் கொண்ட இவரை நாகாலாந்து ஆளுநராக மத்திய அரசு நியமித்தது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இடையூறு செய்வதற்காகவே இது போன்ற நியமனங்களை ஒன்றிய அரசு கடந்த காலங்களில் செய்திருக்கிறது. இதனைக் கண்கூடாகக் கடந்த சில ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம்.  தமிழகத்தில், வெளிப்படைத்தன்மையுடன் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

விளம்பரமே கூடாது என்று செயல்படும், நேர்மையான ஆட்சியைத் தந்து கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையிலேயே ஆர்.என்.ரவியை ஆளுநராக மோடி அரசு நியமித்திருக்கிறதோ? என்று நான் சந்தேகப்படுகிறேன். தமிழகத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்ட பாஜ., ஆளுநர் நியமனத்தின் மூலம் அச்சுறுத்த நினைக்கிறது. இதற்காக ஆர்.என்.ரவியை பகடைக்காயாகப் பயன்படுத்த மோடி அரசு முயல்கிறது என்ற குற்றச்சாட்டில், 100 சதவிகிதம் நியாயம் இருப்பதாகவே கருதுகிறேன். சிறந்த கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், அறிஞர் பெருமக்கள் ஆகியோரை ஆளுநராக நியமிப்பது தான் சிறந்த மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  

  ஆனால், அவற்றுக்கு முற்றிலும் புறம்பாக பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதற்காகவே பொறுப்புகள் வழங்கப்பட்டு செயல்பட்டவர் ஆர்.என்.ரவி. இவரை தமிழகத்தின் புதிய ஆளுநராக தமிழகத்தில் நியமித்து ஜனநாயகப் படுகொலை நடத்துவதற்கு ஆயுதமாகப் பயன்படுத்த மோடி அரசு முயன்றால், அதனை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் மக்களைத் திரட்டிப் போராட வேண்டிய சூழல் உருவாகும் என எச்சரிக்க விரும்புகின்றேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags : Police Department ,EU government ,Q. S. Brunette , Police Department, New Governor, Democratic Assassination, Union Government, KS Alagiri
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்