×

விமான பயணத்தில் அவசரகால முன்னெச்சரிக்கையை மாநில மொழியில் அறிவிக்க கோரி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்கில், விமான பயணத்தின்போது அவசர காலங்களில் பயணிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த செயல்முறை விளக்கங்கள் மற்றும் விளக்க கையேடு ஆகியவை விமானம் புறப்படுவதற்கு முன்பாக வழங்கப்ட்டு வருகிறது. அவ்வாறு தரப்படும் கையேடு மற்றும் விமானத்தில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தற்போது ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே உள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் 50% மக்கள் மட்டுமே ஆங்கிலமும், இந்தியும் தெரிந்தவர்கள்.

 அவசர காலத்திற்கான இன்றியமையாத விளக்கங்கள் மக்களுக்கு புரிகிற மொழியில் இருக்க வேண்டும். எனவே, பயணிகள் பாதுகாப்பு கருதி, பாதுகாப்பு அறிவிப்புகள் மற்றும் விளக்க கையேடுகளை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அட்டவணை 8ல் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், அசாமி, குஜராத்தி, பெங்காலி, காஷ்மீரி உள்ளிட்ட 23 மொழிகளிலும் வழங்குமாறு உத்தரவிட வேண்டும்.

 இந்திய நிறுவனங்களால் நடத்தப்படும் ஏர் இண்டியா, ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ் ஜெட், கோ ஏர், இண்டிகோ, ஏர் ஏசியா மற்றும் டாட்டா விஷ்ட்டா ஆகிய விமானங்களில் இதை அமல்படுத்துவதுடன் விமானம் புறப்படும் மற்றும் விமானம் சென்றடையும் மாநிலத்தின் ஆட்சி மொழியில் அறிவிப்புகள் வெளியிடுமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

Tags : Cory iCourt , Air travel, emergency warning, State Language, HIGH COURT
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...