×

அமைச்சராக எல்லாம் ஆக முடியாது குழந்தைகளை பெத்து போடத்தான் பெண்கள்: தலிபான்கள் திமிர் பேச்சு

காபூல்: ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள தலிபான் தீவிரவாத அமைப்பு, இடைக்கால அரசை அமைத்துள்ளது.  இதில் இடம் பெற்றுள்ள 33 பேரும் தலிபான்கள்தான்.  ஆரம்பத்தில், அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி தருவோம், பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும், கல்வி கற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றெல்லாம் தலிபான்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனால், அதெல்லாம் ஆட்சி அமைத்த பிறகு காற்றில் பறக்கிறது. ஆட்சியில் உரிமை கோரி பெண்கள் அமைப்பினரின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

இந்நிலையில், ஆப்கானின் 24 மணி நேர செய்தி சேனலான டோலோவுக்கு தலிபான் செய்தி தொடர்பாளர் பேட்டி அளித்துள்ளார். அதில், ‘தலிபான்கள் அமைச்சரவையில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?’ என செய்தியாளர் கேள்வி கேட்டதற்கு, தலிபான் செய்தி தொடர்பாளர், ‘‘பெண்கள் அமைச்சராக முடியாது. அவர்களால் அவ்வளவு பெரிய பொறுப்பை சுமக்க முடியாது.  அமைச்சரவையில் பெண்கள் இடம் பெற வேண்டிய அவசியமும் இல்லை. குழந்தைகளை பெற்று கொடுப்பதுதான் அவர்களின் ஒரே வேலை. மற்றபடி, இங்கு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் பெண்களுக்கு எல்லாம் அமைச்சரவையில் நிச்சயம் இடம் கிடைக்காது,’’ என்றார் திமிராக.

ஏற்கனவே, பெண்கள் கிரிக்கெட் விளையாட நேற்று முன்தினம் தலிபான்கள் தடை விதித்தனர். பெண்களின் போராட்டத்தை வீடியோ எடுத்ததாக இதுவரை 14 பத்திரிகையாளர்களை அவர்கள் அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.

‘பஞ்ச்ஷிரில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தவில்லை’
ஆப்கானில் தங்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்த பஞ்ச்ஷிர் மாகாணத்தையும், தலிபான்கள் சில நாட்களுக்கு முன்பாக தங்கள் வசம் கொண்டு வந்தனர். அங்கு நடந்த தேசிய கிளர்ச்சிப் படைகளுக்கு எதிரான உள்நாட்டு போரில் தலிபான்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் உதவியதாக தகவல்கள் வெளியாகின. பாகிஸ்தானின் 27 போர் ஹெலிகாப்டர்களும், டிரோன் விமானங்களும் கிளர்ச்சிப் படைக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதன் வெளியுறவு செய்தி தொடர்பாளர் அசிம் இப்திகார் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பொய்யான இந்த செய்தியை மறுக்கிறோம். சர்வதேச சமூகத்தின் முன் பாகிஸ்தானுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டுமென கெட்ட நோக்கத்துடன் இந்த புரளி பரப்பப்படுகிறது,’’ என்றார்.

Tags : Taliban , Minister, bed the children The women, the Taliban
× RELATED ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை