×

கொரோனா தொற்று அச்சுறுத்தலால் இந்தியா-இங்கிலாந்து 5வது டெஸ்ட் ரத்து

மான்செஸ்டர்: இந்தியா - இங்கிலாந்து அணிகளிடையே நேற்று தொடங்குவதாக இருந்த 5வது டெஸ்ட் போட்டி, கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ரத்தானது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்றது. 3வது டெஸ்டில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை வசப்படுத்தி பதிலடி கொடுக்க, 1-1 என சமநிலை ஏற்பட்டது.

அடுத்து லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த 4வது டெஸ்டில் இந்தியா 157 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 2-1 என மீண்டும் முன்னிலை பெற்றது. இந்த நிலையில், 5வது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டர், ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நேற்று தொடங்குவதாக இருந்தது. ஏற்கனவே 4வது டெஸ்ட் போட்டியின்போது இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவருடன் தொடர்பில் இருந்த பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ராமகிருஷ்ணன் ஸ்ரீதர் மற்றும் பிசியோதெரபி நிபுணர் நிதின் படேல் ஆகியோர் குவாரன்டைன் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்திய அணி ஊழியர் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொ ரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் இந்திய அணி வலைப்பயிற்சி ரத்து செய்யப்பட்டதுடன், வீரர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் தொற்று இல்லை என முடிவு வந்ததை அடுத்து, 5வது டெஸ்ட் திட்டமிட்டபடி தொடங்கும் என்று அறிவித்திருந்தனர். ஆனால், நேற்று போட்டி தொடங்குவதற்கு 2 மணி நேரமே இருந்த நிலையில், போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக முதலில் தகவல் வெளியானது. இரு நாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கிடையே பல கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் போட்டி ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

முதல் 3 நாட்களுக்கு ‘ஹவுஸ் புல்’ ஆகியிருந்த நிலையில், போட்டியைக் காண டிக்கெட் வாங்கியிருந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். இந்தியா 2-1 என முன்னிலை வகித்தாலும், தொடரின் முடிவு குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தான் இறுதி முடிவு எடுத்து அறிவிக்கும் எனத் தெரிகிறது. நடப்பு சீசன் ஐபிஎல் டி20 தொடரின் எஞ்சியுள்ள ஆட்டங்கள் வரும் 19ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்க உள்ளது. அதைத் தொடர்ந்து ஐசிசி டி20 உலக கோப்பை தொடரும் அங்கு நடைபெற உள்ள நிலையில், மீண்டும் கொரோனா தொற்று பிரச்னை தலையெடுத்துள்ளது கிரிக்கெட் உலகை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Tags : India ,England , Corona infection, India-England, Test cancellation
× RELATED எங்கள் அணுகுமுறையில் இருந்து நாங்கள்...