மேற்கு வங்கத்தில் சூடுபிடித்தது இடைத்தேர்தல் பவானிபூரில் மம்தாவை எதிர்த்து பாஜ பெண் வழக்கறிஞர் போட்டி: காங்கிரஸ் ஒதுங்கியது

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் மம்தா திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்த போதிலும், நந்திகிராம் தொகுதியில் பாஜ.வின் சுவேந்து அதிகாரியிடம் மம்தா தோல்வியடைந்தார். 3வது முறையாக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட மம்தா,  6 மாதத்தில் தேர்தலில்  போட்டியிட்டு எம்எல்ஏவாக வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, வழக்கமாக மம்தா போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரசின் சோபன்தேவ் சட்டோபாத்யாய் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால், பவானிபூா் உள்பட மேற்கு வங்கத்தில் காலியாக  உள்ள  3 தொகுதிகளுக்கு வரும் 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட உள்ளனர். இந்நிலையில், பவானிபூரில் மம்தாவை எதிர்த்து பாஜ சார்பில் பெண் வழக்கறிஞர் பிரியங்கா திப்ரீவல் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார். மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிறகான வன்முறைகள் தொடர்பாக மாநில அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களில் பிரியங்காவும் ஒருவர்.

முன்னாள் ஒன்றிய அமைச்சர் பாபுல் சுப்ரியோவின் சட்ட ஆலோசகராக செயல்பட்ட பிரியங்கா, நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி பெற்றவர். காங்கிரஸ், பவானிபூர் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.  பவானிபூரில் திரிணாமுல்-பாஜ இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளதால் இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ளது. இதற்கிடையே, மம்தா பானர்ஜி பவானிபூரில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

Related Stories:

More
>