×

சென்னையில் தனியார் இடங்களில் 350 விநாயகர் சிலைகள் அமைப்பு: போலீஸ் பாதுகாப்புடன் கடலில் கரைப்பு

சென்னை: கொரோனா தொற்று காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீடுகளில் கொண்டாட வேண்டும் என்றும், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட வேண்டாம் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது. அரசு உத்தரவை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுதல் மற்றும் ஊர்வலமாக எடுத்து செல்லும் செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர். மேலும், இதனை கண்காணிக்க 12 காவல் மாவட்டங்களில் துணை கமிஷனர் மேற்பார்வையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் போலீசாரின் தடை உத்தரவை மீறி திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டையில் உள்ள பிள்ளையார் கோயில் தெருவில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைக்க முயன்ற போது போலீசார் அதை தடுத்தனர். அப்போது போலீசாருக்கும் இந்து முன்னணி நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு தனியார் இடத்தில் சிலை வைக்கப்பட்டது. தேபோல், சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி மாநில தலைமை அலுவலகம் முன்பும், விநாயகர் சிலை வைக்கப்பட்டது. அங்கும் போலீசார் சிலைகளை அகற்ற முயன்றதால் சிலையை தனியார் இடத்திற்கு மாற்றினர்.

சூளை தீர்த்தான் குளம் பகுதியில் பாரத் இந்து முன்னணி சார்பில் சந்தன பிள்ளையார் சிலை, தி.நகர் ரங்கன் தெருவில் இந்து முன்னணி சார்பில் சிலை வைக்கப்பட்டது. போலீசார் அறிவுறுத்தலை தொடர்ந்து தனியார் இடத்திற்கு சிலை மாற்றப்பட்டது. சென்னை தெற்கு மண்டலத்தில் 170 சிலைகளும், வடக்கு மண்டலத்தில் 180 சிலைகளும் இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் தனியார் இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை நீர் நிலைகளில் கரைக்க போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான கடற்கரையில் சிலைகள் கரைக்க போலீஸ் தடை விதித்துள்ளது.  இதனால் பட்டினப்பாக்கம் பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மாலை சிலைகள் கரைக்கப்பட்டன. மீதமுள்ள சிலைகளும் பாதுகாப்புடன் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : Chennai , Chennai, private, Ganesha statues, police protection
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...