சிறுமியை கர்ப்பமாக்கியவரை விடுதலை செய்த உத்தரவு ரத்து போக்சோ சட்டம் குறித்து நீதிபதிகளுக்கு பயிற்சி அவசியம்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை: .  திருவள்ளூரை சேர்ந்தவர் விக்டர் ஜான். திருமணமான இவர், மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் பக்கத்து வீட்டு 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இந்த விவரம் தெரிந்தவுடன் சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்துள்ளார்.  இது தெரிந்தவுடன்  சிறுமியின் பெற்றோர், திருவள்ளூர் மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் விக்டர் ஜான் மீது போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.  இந்நிலையில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த வழக்கை விசாரித்த திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம், சம்பவ காலத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி 18 வயதுக்கு கீழ் இருந்தார் என்பதை போலீஸ் தரப்பு நிரூபிக்க தவறியதால் விக்டர் ஜான் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மகளிர் போலீஸ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீடு வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசு வக்கீல் எஸ்.சுகேந்திரன் ஆஜராகி, சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான காலத்தில் சிறுமிக்கு 16 வயதுதான்.சிறுமியின் வயது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் கொடுத்த சான்றிதழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.  வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: சிறுமியின் பிறந்த தேதி தொடர்பான சான்றிதழில் அவர் 1998ல் பிறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சம்பவம் நடந்தபோது சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை. அவரை திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியுள்ளது போதிய ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே, விக்டர் ஜானை விடுதலை செய்த திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை சிறுமியின் குழந்தையின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். அந்த குழந்தை உரிய வயதை எட்டியவுடன் வட்டியுடன் அந்த தொகை வழங்கப்பட வேண்டும். விக்டர் ஜானுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்த மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள், விசாரணை அதிகாரிகள், அரசு வக்கீல்களுக்கு போக்சோ சட்டம் குறித்த பயிற்சி தரப்பட வேண்டும் என்று இந்த நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்துகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>