மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்: போதை ஆசாமியை சினிமா பாணியில் வலைவிரித்து காப்பாற்றிய போலீசார்

பொள்ளாச்சி: மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமியை, போலீசார் சினிமா பாணியில் வலைவிரித்து பிடித்து காப்பாற்றினர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா வளாகத்தின் ஒரு பகுதியில் உள்ள ஜேஎம்2 நீதிமன்றம் அருகே குடிபோதையில் சுமார் 35வயது மதிக்கத்தக்க நபர் நேற்று வந்தார். ‘எனக்கு வாழ பிடிக்கவில்லை என்னை தூக்கில் போடுங்கள். என்னை பிடித்து கொண்டு செல்லுங்கள்’ என்று சத்தம்போட்டார். இதை கண்ட அப்பகுதியினர் அவரை அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர். ஆனால் அவர் திடீரென, வளாகத்தில் இருந்த ஒரு வேப்பமரத்தில் ஏறி நின்று, தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்து கூச்சலிட்டார். இதை கண்ட அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கிழக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் சம்பவயிடம் விரைந்து வந்தனர். பின்னர் மரத்தில் மேல் நின்றவரை கீழே இறங்கி வருமாறு கூறினர். 2 வீரர்கள் மரத்தின் மீது ஏறி அவரை மீட்க முயன்றனர். ஆனால் அவர் கீழே வர மறுத்தார். மேலும் தான் கீழே குதித்து விடுவதாக மிரட்டினார். இதையடுத்து கீழே குதித்தால் அவரை பிடிக்க தீயணைப்பு வீரர்கள் வலையை விரித்து தயாராக இருந்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர், மரத்திலிருந்து திடீரென கீழே குதித்தார். அப்போது அவர் வலைக்குள் விழுந்ததால் உயிர் தப்பினார். இதையடுத்து அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் அவர் காட்டூரை சேர்ந்த மூக்கன் என்ற மணிகண்டன் (35) என்பதும், குடிபோதையில் இச்செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இருப்பினும். அவர் எதற்காக தற்கொலைக்கு முயன்றார்? என கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>