×

நாடு முழுவதும் 65 மாவட்டங்களில் மீண்டும் கொரோனா: 2 ‘டோஸ்’ போட்டிருந்தால் 97.5% இறப்பு ஏற்படாது! ஐசிஎம்ஆர் இயக்குனர் பேட்டி

புதுடெல்லி: நாடு முழுவதும் 65 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியில் இரண்டு டோசும் போட்டிருந்தால் 97.5 சதவீதம் அளவிற்கு இறப்பு ஏற்படாது என்று ஐசிஎம்ஆர் இயக்குனர் தெரிவித்தார்.  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) இயக்குநர் பல்ராம் பார்கவா, தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘விஞ்ஞானிகளின் உதவியுடன் கொரோனா தடுப்பூசி ‘டிராக்கர்’ தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தளத்தின் மூலம் அறியப்பட்ட தகவலின்படி, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் கூட அவர்கள் இறப்புக்கான வாய்ப்பு ஏற்படாது. இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டால் 96.06 சதவீதம் அளவிற்கு நோயாளிக்கு இறப்பு ஏற்படாது.

தடுப்பூசியின் இரண்டு டோசும் போட்டுக் கொண்டவர்களுக்கு 97.5 சதவீதம் இறப்பு ஏற்படாது’ என்றார். தொடர்ந்து ஒன்றிய சுகாதார அமைச்சக சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறுகையில், ‘தற்போது விழாக்கள் காலம் என்பதால், பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது மிகவும் முக்கியம். வீட்டில் இருந்தே குடும்பத்தினருடன் திருவிழாவைக் கொண்டாட வேண்டும். நாடு முழுவதும் 65 மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இவற்றில், 35 மாவட்டங்களில் மாற்றம் விகிதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. 30 மாவட்டங்களில் வாராந்திர மாற்றம் விகிதம் ஐந்து முதல் 10 சதவீதம் வரை உள்ளது. இதுதவிர, 38 மாவட்டங்களில் தினமும் 100க்கும் மேற்பட்டோர் புதியதாக பாதிக்கின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, வாராந்திர தொற்று விகிதம் ஐந்துக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே மாவட்டத்தின் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக கருத முடியும். இந்த விகிதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இமாச்சல பிரதேசம், கேரளா, வடகிழக்கு மாநில மாவட்டங்களில் உள்ளன. கேரளாவில் தற்போது 2.40 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிராவில் 51,419 நோயாளிகளும், கர்நாடகாவில் 17,085 பேரும், தமிழகத்தில் 16,180 பேரும், ஆந்திராவில் 14,510 பேரும் உள்ளனர். தேசிய அளவில் கிட்டதிட்ட 30 மாநிலங்களில் தலா 10,000க்கும் குறைவான மக்களே சிகிச்சையில் உள்ளனர். கடந்த 31 நாட்களில் 6.1 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 6.24 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : Corona ,ICMR , Corona again in 65 districts across the country: 97.5% deaths if 2 ‘doses’ are given! Interview with ICMR Director
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...