×

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி: ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அரை இறுதிக்கு முன்னேற்றம்

நியூயார்க்: ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 10வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), இத்தாலியின் பெரேட்டினியை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் முதல் செட்டை ஜோகோவிச் இழந்தார். பின்னர், தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரேட்டினியை திணறடித்தார். 3 மணி 30 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில், ஜோகோவிச் 5-7, 6-2, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் பெரேட்டினியை தோற்கடித்து, 12-வது முறையாக அரை இறுதிக்கு முன்னேறினார். 3 முறை சாம்பியனான ஜோகோவிச் அமெரிக்க ஓபனில் ருசித்த 80-வது வெற்றி இதுவாகும்.

முன்னதாக நடந்த கால் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7-6 (8-6), 6-3, 6-4 என்ற நேர்செட்டில் தென்ஆப்பிரிக்காவின் லாயிட் ஹாரிஸ்சை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக அரை இறுதிக்குள் நுழைந்துள்ளார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 6 நிமிடம் தேவைப்பட்டது. இது சர்வதேச போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் தொடர்ச்சியாக பெற்ற 16-வது வெற்றியாகும். அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அரை இறுதியில் நோவக் ஜோகோவிச்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) சந்தித்தார். 1 மணி 22 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் மரியா சக்காரி 6-4, 6-4 என்ற நேர்செட்டில் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி முதல்முறையாக அரை இறுதிக்குள் நுழைந்தார். இதன் மூலம் 26 வயதான மரியாசக்காரி அமெரிக்க ஓபனில் அரை இறுதிக்கு முன்னேறிய முதல் கிரீஸ் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

மற்றொரு கால்இறுதியில் தகுதி சுற்று மூலம் முன்னேறிய 150-ம் நிலை வீராங்கனையான இங்கிலாந்தை சேர்ந்த 18 வயது இளம் புயல் எம்மா ராட்கானு, பெலின்டா பென்சிச்சை (சுவிட்சர்லாந்து) எதிர்கொண்டார். இதில் எம்மா ராட்கானு 6-3, 6-4 என்ற நேர்செட்டில் பெலின்டா பென்சிச்சை வெளியேற்றி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக அரை இறுதியை எட்டினார். இதன் மூலம் ‘ஓபன் எரா’ வரலாற்றில் (1968-ம் ஆண்டு முதல்) அமெரிக்க ஓபன் அரை இறுதிக்குள் நுழைந்த முதல் தகுதி சுற்று வீராங்கனை என்ற சிறப்பை தனதாக்கினார். அத்துடன் தகுதி சுற்று மூலம் ஏற்றம் கண்டு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அரைஇறுதிக்கு முன்னேறிய 4-வது வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். இந்த போட்டி தொடரில் அவர் இதுவரை ஒரு செட்டை கூட இழக்கவில்லை. அமெரிக்க ஓபன் அரை இறுதிக்கு தகுதி பெற்ற இளம் வீராங்கனை என்ற பெருமையை பெற்று இருக்கும் எம்மா ராட்கானு, அரை இறுதியில் மரியா சக்காரியுடன் மோதுகிறார்.

Tags : US Open ,Djokovic ,Alexander Sverev , US Open tennis tournament: Djokovic, Alexander Sverev advance to semifinals
× RELATED பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச்சை வீழ்த்திய சென்னை ஓபன் ரன்னர்!