திருச்சுழி அருகே தங்கிப்பணியாற்ற வீடுகளின்றி அவதிப்படும் மருத்துவப்பணியாளர்கள்

திருச்சுழி:  திருச்சுழி அருகே தங்கி பணியாற்ற வீடுகளின்றி மருத்துவப் பணியாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திருச்சுழி அருகே உள்ள ம.ரெட்டியபட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இம்மருத்துவமனைக்குட்பட்ட ரெட்டியபட்டியைச் சுற்றியுள்ள மறவர் பெருங்குடி, சலுக்குவார்பட்டி, சுத்தமடம், தும்முசின்னம்பட்டி, மண்டபசாலை உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களிலிருந்து திடீரென்று நோய் வாய்ப்பட்டால் ரெட்டியபட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரவேண்டியுள்ளது. இம்மருத்துவமனையில் சுமார் 20  வருடங்களுக்கு முன்பு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கி பணிபுரியவதற்கு சுமார் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு குடியிருந்து வந்தனர்.

அவை நாளடைவில் பராமரிக்கப்படாமலும், கிடப்பில் போடப்பட்டதால் தற்போது குடியிருப்பு இடிந்த நிலையிலும், உட்புறமும், வெளிபுறமும் சுவர்கள் பெயர்ந்தும், தரை முழுவதும் சேதமடைந்தும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாலும் பணியாளர்கள் அவ்வீடுகளில் தங்க முடியதா நிலை ஏற்பட்டது. குடியிருக்காத வீட்டிற்கு வாடகை கட்டுவதாக  மருத்துவ பணியாளர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்ததன் பேரில் வாடகை செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது இரவு நேர மருத்துவர் மற்றும் பணியாளர்கள் தங்கி வேலை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ம.ரெட்டியபட்டியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலுள்ள குடியிருப்புகளை அப்புறப்படுத்தி மீண்டும் புதிய குடியிருப்புகள் கட்டி தர வேண்டுமென பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அரசு மருத்துவப்பணியாளர்கள் கூறுகையில், ம.ரெட்டியபட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பணியாளர்களுக்கென  வீடு கட்டப்பட்டு  பல வருடங்களுக்கு முன்பு இங்கு பணியாற்றியவர்கள் குடியிருந்து வந்தனர். காலப்போக்கில்  இடிந்து போன வீட்டில் குடியிருக்க முடியாத நிலையில் அருப்புக்கோட்டை, விருதுநகர் போன்ற நகரங்களில் வாடகை வீட்டில் தங்கி வேலை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம். எனவே, பணியாளர்களுக்கு விரைவில் குடியிருப்புகள் கட்டி தர வேண்டும் எனக்கூறினர்.

Related Stories: