×

அறந்தாங்கி அருகே 37 ஆண்டுகளுக்கு முன் விவசாயி உருவாக்கிய பனைமரக்காடு கம்பீரமாக காட்சி தருகிறது

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே உள்ளது பாண்டிக்குடி கிராமம். இந்த கிராமத்தில் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது சுமார் 60 ஏக்கர் பரப்பளவிலான பாண்டிக்குளம். குளத்திற்கான எந்த சாயலும் இல்லாமல் அழகிய ஏரி போல் காட்சியளித்தாலும் அதனை குளமென்றே அக்கிராமத்து மக்கள் கூறி வருகின்றனர்.
அந்தக் குளத்தை சுற்றித்தான் பல்லாயிரக்கணக்கான பனை மரங்கள் தற்போது பரந்து விரிந்து அழகிய பசுமை போர்த்திய பனைமரக் காடாக காட்சியளிக்கிறது. ஒரே இடத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த பனை மரங்களுக்கு வயது தற்போது 37 ஆகிவிட்டது. இந்த பனை மரங்களில் காய்க்கும் நுங்குகளை உண்பதற்காக சுற்று பகுதியை சேர்ந்த பல கிராமங்களில் இருந்தும் இளைஞர்கள் படையெடுத்து அங்கு வருவதாக கூறுகின்றனர் அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள். அதுமட்டுமின்றி பனை மட்டைகளுக்காகவும், பனை விறகுகளுக்காகவும், பல கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அங்கு வந்து பயன்பெறுவதாக கூறுகின்றனர் பாண்டிக்குடி மக்கள். பல கிராம மக்களுக்கும் பலனைக் கொடுக்கும் இந்த பல்லாயிரக்கணக்கான பனைமரங்களை வளர்த்து இருப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அந்த கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி என்ற விவசாயி. அவருக்கு பனை விதைகளை நடவு செய்யலாமே என்று யோசனை தோன்றியது. எளிய முறையில் வளரும் என்பதாலும், தமிழர்களின் பாரம்பரிய மரம் என்பதாலும் இதனைத் தேர்ந்தெடுத்து தனது ஒத்த வயதுடைய இளைஞர்களை ஒன்றிணைத்து பாண்டிக்குளத்தை சுற்றி பல்லாயிரக்கணக்கான பனை விதைகளை நடவு செய்து முடித்துள்ளனர் திருப்பதியும் அவரது நண்பர்களும்.

எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், எதிர்கால சந்ததிகளை கருத்தில் கொண்டு தங்கள் கிராமத்தில் உள்ள பொது இடத்தில் 37 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் விதைத்த பனை விதைதான் இன்று விருட்சமாக உருவெடுத்து பலரையும் புருவம் உயர்த்தி பார்க்க வைத்துள்ளது இன்று. அந்த விதைகள் மெல்ல மெல்ல வளர்ந்து மரமாக உருவெடுத்து, இன்று அந்த கிராமத்துக்கு மட்டுமின்றி அதனை சுற்றிய பல கிராமங்களுக்கு வரமாக அமைந்துள்ளது அந்தப் பனை மரக்காடுகள். இந்த தலைமுறை இளைஞர்களை ஒன்றிணைத்து அதே பகுதியில் மீண்டும் பனை விதை நடவு செய்யும் முயற்சியிலும் திருப்பதி ஈடுபட்டு வருகிறார். அங்குள்ள பனைமரக்காடுகளில் பல்லாயிரக்கணக்கான பனைவிதைகள் கொட்டிக் கிடப்பதால் அதையே எடுத்து அப்பகுதியில் நடவு செய்து வரும் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வேறு கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும் பனை விதைகளை பாசத்தோடு கொடுத்து வியக்க வைக்கின்றனர்.

தற்போது அரசு பனை மரங்களை காப்போம் பனை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது தங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதே வேளையில் தாங்கள் உருவாக்கிய இந்த பல்லாயிரக்கணக்கான மரங்கள் அடங்கிய பனைமரக்காட்டை அரசு அதிகாரிகள் பார்வையிட்டு முறையான ஆய்வு செய்து இதிலிருந்து இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பனை சார்ந்த தொழிலை செய்வதற்கு உதவி செய்ய வேண்டும். மேலும் இப்பகுதியில் பனை சார்ந்த தொழிலை மேம்படுத்தவும், புதிய நடவு செய்யவும் அரசு ஏதேனும் உதவிகளை செய்தால் பல கிராமங்களில் இதேபோல் இன்றைய தலைமுறை இளைஞர்கள் இன்னும் கூடுதலான பனை மரங்களை உருவாக்க உத்வேகத்தோடு செயல்படுவார்கள் என்கின்றனர் பாண்டிக்குடி கிராமத்தைச் சேர்ந்த முந்தைய தலைமுறை இளைஞர்கள்.

பல்லாயிரக்கணக்கான மரங்கள் அடங்கிய பனைமரக்காட்டை அரசு அதிகாரிகள் பார்வையிட்டு முறையான ஆய்வு செய்து இதிலிருந்து இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பனை சார்ந்த தொழிலை செய்வதற்கு உதவி செய்ய வேண்டும்.

Tags : Palmer ,Rutthangi , Aranthangi, Farmers, Palmyra
× RELATED அறந்தாங்கி நகரில் இயங்காமல் காட்சி...