×

கலைஞர் இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பாரோ அவை அனைத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்கிறார்: தயாநிதி மாறன் எம்.பி பேச்சு

சென்னை: கலைஞர் இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ அவை அனைத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று செய்து கொண்டிருக்கிறார், என தயாநிதி மாறன் எம்.பி கூறியுள்ளார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எழுதிய புத்தக வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசியதாவது: சிறுவயதில் பெரியாரின் மடியில் அமைர்ந்து விளையாடி இருக்கிறோம். அப்போது அவரின் மதிப்பு என்னவென்று தெரியாது. இப்போது தொடர்ச்சியாக படிக்கும் போது தான் பெரியார் பற்றி தெரிந்துகொள்கிறேன். அவரின் செயல்பாடுகள் மீது காதல் பிறக்கிறது. நாடாளுமன்றத்தில் 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை பாஜ கொண்டுள்ளது. அவர்கள் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் எழுப்பியபோது எங்களை அறியாமலே வாழ்க பெரியார், வாழ்க கலைஞர், வாழ்க தமிழ் என்ற கோஷத்தை நாங்கள் எழுப்பினோம். அதுதான் அவர்களை எதிர்த்து எங்களை தற்காத்துக் கொள்ளும் அரணாக அமைந்தது.

இன்று வரை பெரியாரின், அண்ணாவின், கலைஞரின் பெயரை, கொள்கையை கூறித்தான் நாங்கள் நாடாளுமன்றத்தில் பேசுகிறோம். நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த போது மண்டல் கமிஷனை அமல்படுத்த கூடாது என்று வடமாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. ஆனால் தமிழகத்திலோ மண்டல் கமிஷனை அமல்படுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பப்பட்டது. ஏன் இந்த முரண் என்று என் தந்தையிடம் கேட்டேன். 3% மக்களின் சூழ்ச்சியை பற்றியும், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் அவசியம் குறித்தும் அவர் விரிவாக கூறினார். அப்போது அது எனக்கு புரியவில்லை. ஆனால் 3% மக்கள் ஏற்படுத்திய தாக்கத்தையும், அதில் இருந்து மீண்டு வந்ததும் இப்போது எனக்கு புரிகிறது.

அவர்கள் பெரியாரை திட்டி திட்டி பேசுகின்றனர். இறந்த ஒருவரை இப்படி திட்ட வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து இளைய சமுதாயம் தேடி தேடி படிக்கின்றனர். எனவே இன்றைய இளைய சமுதாயத்திற்கு பெரியாரின் செயல்பாடுகள் பற்றி முழுமையாக தெரிந்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சிறப்பாக ஆட்சி செய்கிறார். கலைஞர் இருந்திருந்தால் என்னவெல்லாம்  செய்திருப்பாரோ, அவை அனைத்தும் இன்று மு.க.ஸ்டாலின்  செய்துகொண்டிருக்கிறார்.  இதை ஏற்றுக்கொள்ள முடியாமால் விநாயகர் சதுர்த்தியை  கொண்டாட விடவில்லை என்று கூறுகிறார்கள்.மக்களின் பாதுகப்பை பற்றி கவலையின்றி இணையதளங்களில் பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியவில்லை என்ற பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றியவர் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின். நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாங்கள் பேசினோம். தற்போது சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. சாதிப்பிரிவால் தான் நாம் இன்னும் முன்னேறாமல் இருக்கிறோம். சமூகநீதி வந்தால் மட்டுமே இந்தியா வல்லரசாக மாறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Q. ,Stalin , Chief Minister MK Stalin does everything the artist would have done if he had: Dayanidhi Maran MP speech
× RELATED இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.20 லட்சம் மதிப்பு பீடி இலைகள் பறிமுதல்..!!