அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து நேரடி ஒளிபரப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: சட்டப்பேரவையில் காவல்துறை மீதான மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தமிழக சட்டப்பேரவை  நிகழ்ச்சிகளை, தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்று இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது வலியுறுத்தினார். அதை, இப்போது அவர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். அதை நடைமுறைப்படுத்துவதற்காக யோசித்து  கொண்டிருக்கும்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. எனவே, அதை நீங்கள் செயல்படுத்த வேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: சட்டப்பேரவை நேரடி ஒளிப்பரப்பு செய்வதை பற்றி எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டு சொன்னார். நாங்கள் ஒரு முறை அல்ல 10 ஆண்டு காலமாக தொடர்ந்து கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். 10 ஆண்டுகாலம், ஆட்சியில் இருந்த நீங்கள் அதை செய்யவில்லை. முன்வரவில்லை. அதனால் தேர்தல் அறிக்கையில் நாங்கள் கூறியுள்ளோம். சட்டமன்ற கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் நடந்து  வருகிறது. அதனால் தான் அந்த முயற்சியில் இறங்க முடியவில்லை. நிச்சயமாக, உறுதியாக சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருக்கிற நமது சட்டமன்ற பேரவை கூட்டதொடரின் போது நேரடியாக ஒளிபரப்பும் சூழ்நிலையை ஏற்படுத்தி தருவோம்.

Related Stories:

>