பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவு திங்கட்கிழமை வெளியீடு: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

சென்னை: பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் வருகிற திங்கட்கிழமை வெளியிடப்படுகிறது. மறுகூட்டலுக்கு வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில்  விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த  மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) துணைத் தேர்வெழுதிய தேர்வர்கள் தேர்வு முடிவினை, மதிப்பெண் பட்டியலாக வருகிற 13ம் தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், துணைத் தேர்விற்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்களுக்கு தேர்ச்சிக்கான மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் வழங்கப்பட்டுள்ளது.

எனவே மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்களும் மேற்குறிப்பிட்ட வழிமுறையில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு வருகிற 15ம் தேதி (புதன்கிழமை) மற்றும் 16ம் தேதி (வியாழக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் நேரில் சென்று  ஒவ்வொரு பாடத்திற்கும் - ரூ.275, உயிரியல் பாடத்திற்கு மட்டும் - ரூ.305 மற்றும் ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>