×

இரு ரன்வேக்களை இணைக்கும் வகையில் சென்னை விமான நிலையத்தில் புதிய இணைப்பு ஓடுபாதை திறப்பு: முதன்முதலில் ஓடிய ஏர்இண்டியா விமானத்திற்கு வாட்டர் சல்யூட் வரவேற்பு

சென்னை: சென்னை விமானநிலையத்தில் இரு ரன்வேக்களையும் இணைக்கும் விதத்தில் புதிய இணைப்பு பாதை (டேக்ஸி வே) நேற்று செயல்பாட்டிற்கு வந்தது. அந்த புதிய இணைப்பு பாதையில் முதன்முதலில் ஓடிய ஏர்இண்டியா விமானத்திற்கு வாட்டர் சல்யூட் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை விமானநிலையத்தில் புதிய (டேக்ஸி வே) இணைப்பு ஓடுபாதை திறப்பு விழா நேற்று காலை நடந்தது. சென்னை உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களை சுமார் ரூ.2,450 கோடி செலவில் அபிவிருத்தி செய்யும் பணி நடந்து வருகிறது. அதில் ஒரு கட்டமாக, சென்னை விமானநிலைய பிரதான ஓடுபாதையை (ரன் வே) மற்றும் இரண்டாவது ஓடுபாதையை (ரன் வே) இணைக்கும் விதத்திலும் புதிய இணைப்பு பாதை (டேக்ஸி வே) அமைக்கும் பணி நடந்து வந்தது. அப்பணி நிறைவடைந்து நேற்று செயல்பாட்டிற்கு வந்தது.

இந்த புதிய இணைப்பு பாதை 1970 மீட்டர் நீளம், 25 மீட்டர் அகலமுடையது. அதோடு திரும்புகின்ற இடத்தில் மேலும் 9.5 மீட்டர் அகலமுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் உள்ள 2 ரன்வேக்களில் வந்து இறங்கும் விமானங்கள் ஓடுபாதையில் ஓடிவிட்டு, பின்பு இந்த புதிய இணைப்பு பாதையில் ஓடி, அதன்பின்பு விமானங்கள் நிற்க வேண்டிய பாா்க்கிங் பே வில் சென்று நிற்கும் அளவில் வடிவமைக்ககப்பட்டுள்ளது. மேலும் விமானங்கள் தரையிறங்கி ஓடுபாதையில் ஓடி, பார்க்கிங் பேவுக்கு நிற்க வரும்போது, அதிக அதிர்வுகள் இல்லாமல், சீரான வேகத்தில் வந்து நிற்பதற்கான கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய இணைப்பு பாதை அமைக்கப்பட்டுள்ளதால், பார்க்கிங் பேவில் உள்ள விமானங்கள் ஓடுபாதைகளுக்கு வருவதற்கும், ஓடுபாதையில் வந்து தரையிறங்கிய விமானங்கள் பார்க்கிங் பேவிற்கு செல்வதற்கும் மிகவும் வசதியாக இருக்கும். இனிமேல் சென்னை விமானநிலையத்தில் விமானங்கள் வந்து தரையிறங்குவது, புறப்படுவது மேலும் துரிதமாக செயல்படுத்த முடியும். இந்த புதிய இணைப்பு பாதையில் நேற்று காலை டெல்லியிலிருந்து சென்னை வந்த ஏா் இண்டியா விமானம் முதன்முதலில் தரையிறங்கியது. அந்த விமானத்திற்கு விமான நிலைய தீயணைப்பு 2 வண்டிகள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து மரியாதை (வாட்டர் சல்யூட்) தெரிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags : Chennai Airport ,Air India , New salute at Chennai Airport to connect two runways: Water salute welcomes first Air India flight
× RELATED அதிக பயணிகளை கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம்..!!