×

ஊராட்சிகள் வர்த்தக கட்டிடங்களுக்கு கூடுதல் சொத்து வரி விதிக்கும் உத்தரவுக்கு தடை: ஐகோர்ட் அமர்வு தீர்ப்பு

சென்னை: வர்த்தக ரீதியில் செயல்படும் கட்டிடங்களுக்கு, கூடுதல் சொத்து வரி விதிக்க கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் உள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது. நாமக்கல் மாவட்டம், வளையகாரனூர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியிடம் கூடுதல் சொத்து வரி செலுத்தும்படி தட்டான்குட்டை கிராம பஞ்சாயத்து சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி வர்த்தக ரீதியில் செயல்படும் கட்டிடங்களுக்கு கூடுதல் சொத்து வரி விதிக்க கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் உள்ளதாக கூறி கல்லூரி நிர்வாகத்தின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார். இந்நிலையில், தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து அந்த கல்லூரி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், சத்திகுமார் சுகுமார குரூப் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கல்லூரி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மூத்த வக்கீல் கே.துரைசாமி, பொதுநல வழக்கில்தான் இதுபோல ஒரு உத்தரவு பிறப்பிக்க முடியும். ரிட் வழக்கில்  இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்க முடியாது. எனவே, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்ததுடன் இது குறித்து தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைத்தனர்.

Tags : ICC , Prohibition of order imposing additional property tax on commercial buildings by panchayats: ICC session judgment
× RELATED டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன்...