×

இன்று 5வது டெஸ்ட் தொடக்கம் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா: சமன் செய்யும் ஆசையில் இங்கிலாந்து

மான்செஸ்டர்: கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இங்கிலாந்து-இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட் மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்ஃபோர்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 5 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட்டை 151ரன் வித்தியாசத்தில் இந்தியாவும், 3வது டெஸ்ட்டை ஒரு இன்னிங்ஸ் 76ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தும் கைப்பற்றின. தொடர்ந்து நடந்த 4 வது டெஸ்ட்டில் இந்தியா 157ரன் வித்தியாசத்தில் கிடைத்த வெற்றி கிரிக்கெட் உலகில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

எனவே இந்தியா தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முன்னிலை உற்சாகத்துடன் இன்று தொடங்கும் கடைசி டெஸ்ட்டில் இந்தியா களமிறங்குகிறது. கடந்த டெஸ்ட்களில் களமிறங்கிய அதே அணிதான் என்பதில் கோஹ்லி உறுதியாக இருக்கிறார். காயத்தால் அவதிப்பட்ட ஷமி குணமானால், அவர் முகமது சிராஜ்க்கு பதில் களமிறங்க கூடும். மற்ற வீரர்களில் மாற்றம் இருக்காது. கோஹ்லியை விட ரகானே நன்றாக விளையாடுவதால்  அவரை நீக்கும் வாய்ப்பு குறைவு. வெற்றியை தொடர்வதின் மூலம் இந்தியா தொடரை கைப்பற்றும்.

இந்த டெஸ்ட்டில் டிரா செய்தாலும், 14 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தில் தொடரை வெல்லும் வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் உள்ளூரில் தோற்பது இங்கிலாந்து அணிக்கு சங்கடமான விஷயம். ஆனால் ஜோ ரூட்டை தவிர மற்றவர்கள் தொடர்ந்து ரன் குவிக்க முடியாமல் தடுமாறுகின்றனர். ஆண்டர்சன், ராபின்சன், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் பரவாயில்லை. குழந்தை பிறப்புக்காக விடுமுறையில் சென்ற ஜோஸ் பட்லர் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார். எனினும் மீண்டும் மார்க் வுட் என ஏகப்பட்ட மாற்றங்களுடன் இங்கிலாந்து அணி இன்று களமிறங்க கூடும். ஏனென்றால் இந்த டெஸ்ட்டில் வெற்றி அவசியம். அப்படி வெற்றி பெற்றால்தான் தொடரை டிரா செய்ய முடியும். எனவே  இங்கிலாந்து வெற்றிக்கு போராடும் என்பதால் கடைசி டெஸ்ட்டிலும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

* அச்சுறுத்தும் கொரோனா
தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட  ஏற்கனவே 3 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில் இந்திய அணி ஊழியர் ஒருவருக்கும் நேற்று தொற்று உறுதி  செய்யப்பட்டது. அதனால் நேற்று பயிற்சி ரத்தாகி விட்டது. அச்சுறுத்தும் கொரோனாவால் இன்று போட்டி நடைபெறுமா என்ற சந்தேகமும் உள்ளது.

Tags : India ,England , India on the verge of winning the 5th Test starting series today: England in the desire to equalize
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...